search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத்துடன் பிரதமர் மோடி
    X
    கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத்துடன் பிரதமர் மோடி

    உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

    ஜெர்மனி, இத்தாலி, கத்தார், கொலம்பியா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார்.
    நியூயார்க்:

    பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார கால அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    முதலில் ஹூஸ்டன் நகருக்கு சென்ற அவர் அங்கு முன்னணி எரிசக்தி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் வட்ட மேஜை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தின் இடையே அமெரிக்காவில் இருந்து ஆண்டுக்கு 50 லட்சம் டன் திரவ இயற்கை எரிவாயு இறக்குமதி செய்வதற்கு மோடி முன்னிலையில் கையெழுத்தானது.

    தொடர்ந்து ‘மோடி நலமா?’ (ஹவ்டி மோடி) என்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக மோடியும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் ஒரே மேடையில் தோன்றிப்பேசினர். அமெரிக்க எம்.பி.க்களுடனும் மோடி கலந்துரையாடினார்.

    அதையடுத்து ஹூஸ்டன் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, நியூயார்க் நகருக்கு சென்றார். அங்கு ஐ.நா. தலைமையகத்தில் பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.

    இதன் இடையே பிரதமர் மோடி உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதில் கவனம் செலுத்தினார்.

    அந்த வகையில், ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், இத்தாலி பிரதமர் கியூசெப் கோண்டே, கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத், கொலம்பியா அதிபர் இவான் டியூக் மார்கியூஸ், நைஜர் அதிபர் இசவ்பவ் முகமது, நமீபியா அதிபர் ஹஜே ஜெயிங்காப், மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலி, பூடான் பிரதமர் லோட்டாய் ஷெரிங், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் ஆகியோரை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீ‌‌ஷ்குமார் தெரிவித்தார்.

    கத்தார் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியர்களின் பங்களிப்புக்காக கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் நன்றி தெரிவித்தார். பயங்கரவாத ஒழிப்பில் இரு தரப்பு ஒத்துழைப்பு பற்றியும் பேசப்பட்டது.

    நைஜர் நாட்டில் மகாத்மா காந்தி சர்வதேச மாநாட்டு மையம் அமைப்பதற்கு இந்தியா 35 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 245 கோடி) வழங்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விவசாயம், சூரிய மின்சக்தி துறைகளில் இந்தியா, நைஜர் இடையே ஒத்துழைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    இத்தாலி பிரதமர் கியூசெப் கோண்டேயுடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேசியபோது, பாதுகாப்பு, பொருளாதார துறைகளில் ஒத்துழைப்பது பற்றி பேசப்பட்டது.

    ஐ.நா.வின் துணை அமைப்பான யுனிசெப்பின் செயல் இயக்குனர் ஹென்ரிட்டா போரேயையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

    பயங்கரவாத தடுப்பு தொடர்பான தலைவர்கள் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர், பயங்கரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடுவதற்கு நிதி மற்றும் ஆயுதங்களைப் பெற அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தினார். உலகில் எங்கு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றாலும், அதை பயங்கரவாத தாக்குதலாகத்தான் பார்க்க வேண்டுமே ஒழிய நல்லது, கெட்டது, பெரியது, சிறியது என்ற அளவில் பார்க்கக்கூடாது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    பருவநிலை மாற்றம் போன்ற சவால்களுக்கு எதிராக உள்ள ஒற்றுமையை, பயங்கரவாத ஒழிப்பிலும் காட்டவும், பயங்கரவாதத்துக்கு எதிராக தயார் நிலையில் இருக்கவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். 
    Next Story
    ×