search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிட்டன் பாராளுமன்றம்
    X
    பிரிட்டன் பாராளுமன்றம்

    பரபரப்பான சூழலில் பிரிட்டன் பாராளுமன்றம் நாளை கூடுகிறது

    பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்க தீர்மானித்த பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு சட்டவிரோதமானது என்று சுப்ரீம் இன்று தீர்ப்பளித்த நிலையில் நாளை பாராளுமன்றம் கூடுகிறது.
    லண்டன்:

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற பிரிட்டன் முடிவு செய்தது. இதற்கான வாக்கெடுப்பில் மக்கள் வெளியேற ஆதரவு தெரிவித்தனர்.

    இதற்கான நடைமுறைகளில் ஆளும்கட்சி  எம்.பி.க்களிடையே கருத்து ஒற்றுமை ஏற்படாததால் முன்னாள் பிரதமர் தெரசா மே பதவி விலக நேரிட்டது. ஏற்கனவே ஒப்புக்கொண்டவாறு அக்டோபர் 31-ம் தேதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவது உறுதி என சமீபத்தில் பொறுப்பேற்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
     
    இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரியும் பிரெக்சிட் நடைமுறைகளில் பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்வைத்த வரைவு அறிக்கைக்கு பாராளுமன்றத்தில் போதிய ஆதரவு கிடைக்காமல் போனது.

    சபாநாயகர் ஜான் பெர்கோவ்

    இதைதொடர்ந்து, அக்டோபர் மாதம் 14-ம் தேதி வரை பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராணி எலிசபெத்துக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று ராணி எலிசபெத், பிரிட்டன் பாராளுமன்றத்தை அக்டோபர் 14-ம் தேதி வரை முடக்கி வைக்க ஒப்புதல் அளித்தார்.

    இதைத்தொடர்ந்து, பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்கி வைக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது. இதையடுத்து, பிரெக்சிட்டுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கினா மில்லர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, 'பாராளுமன்றத்தை முடக்குமாறு ராணிக்கு பரிந்துரை செய்யும் பிரதமரின் முடிவு சட்ட விரோதமானது’ என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பிரிண்டா ஹலே தீர்ப்பளித்தார்.

    இந்நிலையில், பிரிட்டன் பாராளுமன்றத்தின் பொதுச்சபை நாளை காலை (உள்நாட்டு நேரப்படி) 11 மணிக்கு கூடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகர் ஜான் பெர்கோவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
     
    Next Story
    ×