search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெஞ்சமின் நேதன்யாகு - பென்னி கன்ட்ஸ்
    X
    பெஞ்சமின் நேதன்யாகு - பென்னி கன்ட்ஸ்

    இஸ்ரேலில் இரு கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை - பூவா, தலையா போட்டு பிரதமரை தேர்வு செய்ய முடிவு?

    இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி அரசு உருவாக உள்ள நிலையில் பிரதமர் பதவியில் யார் முதலில் அமர்வது? என்ற போட்டி எழுந்துள்ளது.
    ஜெருசலேம்:

    இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

    இதையடுத்து கடந்த வாரம் 2-வது முறையாக மீண்டும் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதிலும் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 120 உறுப்பினர்களை கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பென்னி கான்ட்சின் புளுஅண்ட்ஒயிட் கட்சி 33 இடங்களை கைப்பற்றியது.

    பிரதமர் நேதன்யாகுவின் கர்சர்வேட்டிவ் லிகுட் கட்சி 31 இடங்களை பிடித்தது. கூட்டணி கட்சிகளை சேர்த்தால் நேதன்யாகுவுக்கு 55 எம்.பி.க்களும், பென்னி கான்ட்சுக்கு 57 உறுப்பினர்களும் ஆதரவு அளித்துள்ளனர்.

    இதனால் அங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதையடுத்து 8 எம்.பி.க்களை கொண்டுள்ள இஸ்ரேல் பெய்டெனு கட்சியின் ஆதரவை பெற்றவர்தான் அடுத்த பிரதமர் ஆக முடியும் என்ற சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அக்கட்சி தலைவர் அவிக்டோர் லீபர்மனின் கிங்மேக்கராக உருவெடுத்துள்ளார்.

    பிரதமர் நேதன்யாகு கூட்டணியில் ஒரு மதவாத கட்சியும், பென்னி கான்ட்ஸ் கூட்டணியில் அரபு கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த இரு கட்சிகள் உள்ள கூட்டணியில் இடம்பெற லீபர்மர்ன் விரும்பவில்லை.

    இதனால் அவர் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே நெதன்யாகுவும், பென்னி கான்ட்சும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் அதிபர் ரிவ்லின் ஈடுபட்டுள்ளார். பிரதமர் பதவியை இரு கட்சி தலைவர்களும் சமகால அளவில் பகிர்ந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் பிரதமர் பதவியை யார் முதலில் ஏற்பது தொடர்பாக இழுபறி நீடித்து வருகிறது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இப்பிரச்சனைக்கு தீர்வுகாண இஸ்ரேல் பெய்டெனு கட்சித் தலைவர் அவிக்டோர் லீபர்மன் ஒரு யோசனை தெரிவித்துள்ளார்.

    பிரதமராக முதலில் யார் பதவி ஏற்பது என்பதை நாணயத்தை சுண்டிவிட்டு முடிவு செய்யலாம் என்று நெதன்யாகு, பென்னி கான்ட்ஸ் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். இந்த யோசனை ஏற்கப்பட்டால் நாணயத்தை சுண்டிவிட்டு அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர் முதலில் பிரதமர் பதவியை ஏற்பார்.
    Next Story
    ×