search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார்
    X
    கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார்

    கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் கொல்லப்படலாம் - காங்கிரஸ் தலைவர் பகீர் தகவல்

    சாரதா நிதி நிறுவன மோசடியில் சி.பி.ஐ. அதிகாரிகளால் தேடப்படும் கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் கொல்லப்படலாம் என மேற்கு வங்காளம் காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை முறையாக நடத்தவில்லை எனக்கூறி கொல்கத்தா போலீஸ் கமிஷனராக முன்னர் இருந்த ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க சென்றது.

    அப்போது சி.பி.ஐ. அதிகாரிகளை அம்மாநில போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கைது நடவடிக்கைக்கு எதிராக ராஜீவ் குமார் கொல்கத்தா கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார்.

    இதற்கிடையே, சிபிஐ கைது செய்வதற்கான தடையை கொல்கத்தா கோர்ட் கடந்த 13-ம் தேதி விலக்கிக் கொண்டது. இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சென்றனர்.

    அவர் அங்கு இல்லாததால் மேற்கு வங்காளம் மாநில தலைமை செயலகத்துக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் அவரது இருப்பிடம் தொடர்பாக கடந்த இருநாட்களாக விசாரித்தனர். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தும்படி மேற்கு வங்காளம் மாநில போலீஸ் டி.ஜி.பி. மற்றும் உயரதிகாரிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக இன்று காலை 10 மணிக்குள் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    ராஜீவ் குமார் தரப்பில் கோர்ட்டில் கடந்த 17-ம் தேதி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரிக்கும் நீதிமன்ற எல்லை இதுவல்ல என குறிப்பிட்ட நீதிபதி மனுவை
    தள்ளுபடி செய்தார்.

    சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத கொல்கத்தா நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    இதற்கிடையில், தலைமறைவாக இருக்கும் ராஜீவ் குமார் சார்பில் அலிப்பூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனு இன்று மாலை தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்நிலையில்,  ராஜீவ் குமார் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சிக்கி, சாரதா நிதி நிறுவன ஊழல் தொடர்பான தகவல்களை விசாரணையின்போது தெரிவித்து விட்டால் தங்களுக்கு ஆபத்து நேரிடலாம் என கருதும் ஆளும்கட்சியினரால் (திரிணாமுல் காங்கிரஸ்) அவர் கொல்லப்படலாம் என மேற்கு வங்காளம் மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா குறிப்பிட்டுள்ளார்.

    சோமன் மித்ரா

    இதுதொடர்பாக சோமன் மித்ரா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சாரதா ஊழல் தொடர்பாக விசாரணை செய்ய திரிணாமுல் காங்கிரஸ் அரசின் சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழுவின் தலைவராக ராஜீவ் குமார் இருந்தார்.

    ஆனால், இவ்விவகாரம் தொடர்பான விசாரணையை 2014-ம் ஆண்டில் சி.பி.ஐ. ஏற்றுக்கொண்டபோது அரசியல் பலமிக்க ஆளும்கட்சி பிரமுகர்களுக்கு எதிரான பல உண்மைகளை மறைக்க ராஜீவ் குமார் முயற்சி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவ்வழக்கில் ஆளும்கட்சியை சேர்ந்த பல்வேறு பிரமுகர்களை சி.பி.ஐ. முன்னர் கைது செய்து விசாரித்தது.

    இப்போது சி.பி.ஐ. பிடியில் ராஜீவ் குமார் சிக்கி வாக்குமூலம் அளித்தால் அரசியல் பலமிக்க பலருக்கு தொல்லையாகி விடும். அதனால்தான் அவரை பாதுகாக்க இந்த மாநில அரசு முயற்சித்து வருகிறது
    .
    அவரை வாக்குமூலம் அளிக்க விடாமல் நிரந்தரமாக அமைதியாக்கி விடவும் முயற்சிகள் நடக்கலாம்.எனவே, ராஜீவ் குமார் கொல்லப்படலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×