search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சவுதி அரேபிய பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் துர்க்கி அல்மால்கி
    X
    சவுதி அரேபிய பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் துர்க்கி அல்மால்கி

    எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு பின்னால் ஈரான் இருப்பது நிரூபணம்- சவுதி அரேபியா திட்டவட்டம்

    எண்ணெய் ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னால் ஈரான் இருப்பது சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபணமாகி இருப்பதாக சவுதி அரேபியா உறுதிபட கூறி உள்ளது.
    ரியாத் :

    சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையான அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயல் மீது கடந்த சனிக்கிழமை ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

    இந்தத் தாக்குதலால் சவுதி அரேபியாவில் ஏறக்குறைய 50 சதவீத எண்ணெய் உற்பத்தி அதாவது, நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

    இந்த தாக்குதலுக்கு ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பு ஏற்றனர். ஆனால் இந்த தாக்குதலை ஈரான்தான் நடத்தியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

    மேலும், இந்த தாக்குதலுக்கு பதிலடி தர அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாகவும், எனினும் தாக்குதலுக்கு யார் காரணம் என்பது குறித்து சவுதி அரேபியா கூறும் வரை காத்திருப்போம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.

    ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என கூறி மறுத்து வரும் ஈரான், இது போன்ற பொய் குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால் அமெரிக்காவுடன் முழுமையான போரில் ஈடுபடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தது.

    இந்த நிலையில், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் சிதைவுகள் தாக்குதலின் பின்னால் ஈரான் இருப்பதை உறுதி செய்திருப்பதாக சவுதி அரேபியா கூறி உள்ளது.

    ஏவுகணைகளின் சிதைவுகள்

    ரியாத் நகரில் செய்தியாளர்களை சந்தித்த சவுதி அரேபிய பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் துர்க்கி அல்மால்கி, தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் அதிக துல்லியம் வாய்ந்த ஏவுகணைகளின் சிதைந்த பாகங்களை காட்டினார்.

    அதனை தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “18 ஆளில்லா விமானங்கள் மற்றும் 7 அதி துல்லிய ஏவுகணைகளை கொண்டு எண்ணெய் ஆலை மற்றும் எண்ணெய் வயல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது” என்றார்.

    மேலும், “இந்த ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் வடக்கில் இருந்து ஏவப்பட்டு உள்ளன. இந்த ஆயுதங்கள் அனைத்தும் ஈரான் நாட்டுக்கு சொந்தமானது என தரவுகள் தெரிவிக்கின்றன. எனவே இந்த தாக்குதலின் பின்னால் ஈரான் இருப்பது சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபணமாகியிருக்கிறது” என கூறினார்.

    அதே சமயம் எந்த இடத்தில் இருந்து ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டன என்பதை தற்போது கூறமுடியாது என்றும் அதை உறுதி செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் துர்க்கி அல்மால்கி தெரிவித்தார்.

    இந்த நிலையில் சவுதி அரேபியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை நேரில் சந்தித்து, எண்ணெய் ஆலை தாக்குதல் குறித்து விவாதம் நடத்தினார்.

    அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “சவுதி எண்ணெய் ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதல் இதற்கு முன்னர் நடத்தப்படாத தாக்குதல். இது சவுதிக்கு எதிராக நடத்தப்பட்ட போர் நடவடிக்கை ஆகும். ஈரான் இதற்கு நிச்சயம் பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று கூறினார். 
    Next Story
    ×