search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.நா. மனித உரிமை ஆணையம்
    X
    ஐ.நா. மனித உரிமை ஆணையம்

    காஷ்மீர் விவகாரத்தில் பிறநாடுகள் தலையிடுவதை விரும்பவில்லை - பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

    காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகள் எங்கள் உள் விவகாரங்களில் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
    ஜெனீவா:

    ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42-வது கவுன்சில் கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இதில், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம் அல்ல, இது சர்வதேச அக்கறை கொண்ட  பிரச்சனை. ஜம்மு காஷ்மீரில் துருப்புக்களின் எண்ணிக்கை 7 லட்சத்திலிருந்து 10 லட்சத்துக்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி குரேஷி கூறினார்.

    இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் தாக்குர் சிங் இந்தியா தரப்பில் இன்று பதிலளித்துப் பேசினார்.

    சட்டத்திற்கு உட்பட்டும், அரசியலமைப்பு சட்டத்தின்படியும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா செயல்படுகிறது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நாட்டின் அனைத்து நலத்திட்டங்களும் அங்குள்ள மக்களுக்கு கிடைக்கிறது. குழந்தைகள் உரிமை பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை கிடைக்கப்பெறுகிறது.

    காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை, இட்டுக்கட்டி கூறப்பட்டவை. உலகளாவிய பயங்கரவாதத்தின் மையப்பகுதியில் இருந்து வந்துள்ள ஒரு குழு (பாகிஸ்தான்) பொய் குற்றச்சாட்டை கூறியுள்ளது. பொய் குற்றச்சாட்டு கூறும் நாட்டில் (பாகிஸ்தான்) பயங்கரவாத தலைவர்கள் பல ஆண்டாக வசிப்பதை அனைவரும் நன்கு அறிவர்.

    இந்தியாவின் உள்விவகாரங்களில் எந்த ஒரு நாடும் தலையிடுவதை ஏற்கமுடியாது. பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. உலக பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் விளங்குகிறது.

    பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாகவே ஜம்மு காஷ்மீரில் தற்காலிகமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிற நாடுகள் எங்கள் உள் விவகாரங்களில் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்  என பாகிஸ்தானுக்கு மீண்டும் பதிலடி தந்துள்ளார்.
    Next Story
    ×