search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போரிஸ் ஜான்சன்
    X
    போரிஸ் ஜான்சன்

    பிரிட்டன் பாராளுமன்றத்தை கலைக்கும் பிரதமரின் முடிவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

    பிரிட்டன் பாராளுமன்றத்தை கலைத்துவிட பிரதமர் போரிஸ் ஜான்சன் எடுத்த முடிவை எதிர்த்து முன்னாள் பிரதமரின் ஆதரவுடன் தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
    லண்டன்:

    பிரிட்டன் பாராளுமன்றத்தை கலைத்துவிட பிரதமர் போரிஸ் ஜான்சன் எடுத்த முடிவை எதிர்த்து முன்னாள் பிரதமரின் ஆதரவுடன் தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து  விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் பிரெக்சிட் மசோதா தாக்கல் செய்து பாராளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது.

    அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு அதில் தோல்வியடைந்தது. இதையடுத்து தெரசா மே கடந்த மாதம் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
     
    அதன்பின், இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்குள் பிரெக்சிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இல்லையெனில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும்.

    இதற்கிடையில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிராக்னல் எம்.பி  பிலிப் லீ, லிபரல் டெமாகிரட்ஸ் கட்சியில் இணைந்தார். இதனால், பாராளுமன்றத்தில் போரிஸ் ஜான்சன் தனது பெரும்பான்மையை இழந்தார்.

    இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பிரெக்சிட் விவகாரத்தில் கடந்த 4-ம் தேதி முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. 

    பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு (கோப்பு படம்)

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை மேலும் தாமதப்படுத்தக் கோரும் மசோதா தொடர்பாக பாராளுமன்ற பொது அவையில் விவாதிக்கப்பட்டது. விவாதத்திற்குப் பின்னர் இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மசோதாவுக்கு ஆதரவாக 327 வாக்குகளும், எதிராக 299 வாக்குகளும் கிடைத்தன.

    இதன்மூலம், ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கு பிரிட்டன் அரசு எடுத்த முயற்சியை, சமீபத்தில் நீக்கப்பட்ட கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இணைந்து முதல் கட்டத்தில் தோற்கடித்தனர்.

    இந்த மசோதாவிற்கு மேல்சபையும் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, பிரெக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற பிரதமர் போரிஸ் ஜான்சன் மேலும் 3 மாதம் அவகாசம் கேட்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் அடுத்த வாரத்துக்குள் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரிக்கை விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எம்.பி.க்கள் அவரது கோரிக்கையை நிராகரித்தனர்.

    இந்நிலையில், பிரிட்டன் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவை எதிர்த்து லண்டன்  நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்குக்கு முன்னாள் பிரதமர் ஜான் மேஜர் தனது ஆதரவை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×