search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
    X
    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

    சரியான சூழ்நிலைகள் அமைந்தால் ஈரான் அதிபரை சந்திக்க தயார் - டிரம்ப் பேட்டி

    சரியான சூழ்நிலைகள் அமைந்தால் ஈரான் அதிபரை சந்திக்க தயார் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    பாரீஸ்:

    ஈரானுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு மே மாதம் வெளியேறியது. இதன் காரணமாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன.

    இந்த ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் மற்றநாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷியா, ஜெர்மனி மற்றும் சீனா ஆகியவை அமெரிக்கா-ஈரான் இடையிலான பிரச்சினையை தீர்த்துவைத்து ஒப்பந்தத்தை காப்பற்ற முயற்சித்து வருகின்றன.

    குறிப்பாக இருநாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்து, மோதலை முடிவுக்கு கொண்டு வர பிரான்ஸ் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

    ஈரான் அதிபர் ஹசன் ருஹானி


    இந்த சூழலில் பிரான்ஸ்சில் நடைபெற்ற ‘ஜி-7’ மாநாட்டுக்கு மத்தியில் ஈரான் வெளியுறவு மந்திரி ஜாவத் ஷாரீப் அங்கு திடீர் பயணம் செய்து, அதிபர் மேக்ரானை சந்தித்து பேசினார்.

    ‘ஜி-7’ மாநாட்டுக்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிரான்சில் முகாமிட்டிருந்த வேளையில், ஜாவத் ஷாரீப் பிரான்ஸ் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் ‘ஜி-7’ மாநாட்டுக்கு பிறகு அதிபர் மேக்ரானுடன் பத்திரிகையாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்த டிரம்ப், சரியான சூழ்நிலையில் ஈரான் அதிபர் ஹசன் ருஹானியை சந்திக்க தான் தயாராக இருப்பதாக கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒரு புதிய அணுசக்தி ஒப்பந்தத்தின் வாய்ப்பு இருக்கின்றன. ஈரான் ஒரு சிறந்த தேசமாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

    ஆனால் அவர்களிடம் அணு ஆயுதங்கள் இருக்க முடியாது. ஒரு கூட்டத்திற்கு ஒப்புக்கொள்வதற்கு முன்பு அவர்கள் (ஈரான்) நல்லவர்களாக இருக்க வேண்டும்.

    அவர் (ஹசன் ருஹானி) என்னை சந்தித்து நிலைமையை சீரமைக்க விரும்புகிறார் என்று நான் நினைக்கிறேன். சரியான சூழ்நிலைகள் அமைந்தால் அவரை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை தொடர்ந்து பேசிய மேக்ரான், “டிரம்புக்கும், ஹசன் ருஹானிக்கும் இடையிலான சந்திப்பு அடுத்த சில வாரங்களுக்குள் நடக்கும் என நம்புகிறேன்” என்றார்.

    ஜனாதிபதி டிரம்ப் உடனான சந்திப்பை ஏற்றுக்கொண்டால், அணுசக்தி ஒப்பந்தத்தை காப்பாற்ற முடியும் என ஹசன் ருஹானியிடம் நான் தொலைபேசியில் கூறினேன் என்று மேக்ரான் பேசினார்.

    இந்த நிலையில், அமெரிக்கா பேச்சுவார்த்தையை விரும்பினால் அதற்கு முதல் படியாக ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்

    இது குறித்து அவர் கூறுகையில், “முதலில் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்து சட்டவிரோத மற்றும் நியாயமற்ற பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா நீக்க வேண்டும்” என்றார்.

    மேலும், “அமெரிக்கா இதனை செய்ய தவறினால் எந்தவொரு சாதகமான முன்னேற்றங்களும் இருக்காது. முன்னேற்றங்களுக்கான திறவுகோல் அமெரிக்காவின் கைகளில் உள்ளது” எனவும் கூறினார். 
    Next Story
    ×