search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பிளாஸ்டிக்கை ஒழிக்க இந்தியா தீவிர முயற்சி: ஜி-7 மாநாட்டில் மோடி பேச்சு

    ஜி-7 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு இருப்பதாக கூறினார்.
    பியாரிட்ஸ்:

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் சிறப்பு அழைப்பை ஏற்று, அந்த நாட்டில் உள்ள பியாரிட்ஸ் நகரில் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை, பெருங்கடல் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றங்கள் தொடர்பான அமர்வில் பிரதமர் மோடி பங்குகொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா தீவிரமாக மேற்கொண்டு உள்ளது. அந்த வகையில் நீர்நிலைகள், தாவரங்கள், வனவிலங்குகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பல்லுயிர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.

    இந்திய அரசு பல்வேறு அமைச்சகங்களிலும், துறைகளிலும் டிஜிட்டல் (மின்னணு) தொழில்நுட்ப நடவடிக்கைகளை ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக டிஜிட்டல் பண பரிமாற்றங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. தொழில்நுட்பங்கள் மக்களை சென்றடைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சமூக ஏற்றத்தாழ்வுகளை போக்கி அதிகாரங்களை வழங்குவதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு உள்ளது.

    சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பை தீவிரப்படுத்தி வருகிறோம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

    மாநாட்டில் பேசும்போது மோடி இவ்வாறு கூறியதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.

    ஜி-7 மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், இத்தாலி பிரதமர் கியூசெப்பே காண்டி, செனகல் அதிபர் மேக்கி சால் உள்ளிட்ட தலைவர்களை மோடி சந்தித்து பேசினார்.

    மாநாட்டில் கலந்து கொண்ட மோடி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து இந்தியா புறப்பட்டார்.
    Next Story
    ×