search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப்
    X
    டிரம்ப்

    ஜி-7 மாநாட்டில் பருவநிலை ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார் டிரம்ப்

    ஜெர்மன், இந்திய பிரதமர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகள் இருந்ததால், ஜி-7 மாநாட்டில் பருவநிலை ஆலோசனை கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்கவில்லை என்று வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் விளக்கம் அளித்தார்.
    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டில் நடந்த ஜி-7 மாநாட்டின் ஒரு அங்கமாக, பருவநிலை, பல்லுயிர் பெருக்கம், பெருங்கடல் ஆகியவை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், காலை நிகழ்ச்சிகளையே டிரம்ப் தாமதமாக தொடங்கினார். ஜெர்மன் பிரதமர் ஏஞ்சனா மெர்கலுடனான அவரது சந்திப்பு, 2 மணி நேரம் தாமதமானது. பின்னர், பிரதமர் மோடியை அவர் சந்தித்தார். அப்போது, பருவநிலை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு டிரம்ப், “எனது அடுத்த நிகழ்ச்சி அதுதான். சுத்தமான காற்றும், சுத்தமான குடிநீரும் கிடைப்பதையே நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.

    ஆனால், சொன்னபடி, டிரம்ப் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சிறிது நேரம் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டபோது, டிரம்பின் இருக்கை காலியாக இருப்பதை கண்டனர். இருப்பினும், மாநாட்டை நடத்திய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் திறம்பட சமாளித்தார். டிரம்புக்கு பதிலாக, அவருடைய பிரதிநிதி கலந்து கொண்டதாக அவர் கூறினார்.

    ஜெர்மன், இந்திய பிரதமர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகள் இருந்ததால், அந்த கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்கவில்லை என்று அமெரிக்காவில் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் விளக்கம் அளித்தார். 2015-ம் ஆண்டு பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலக முடிவு எடுத்தவர், டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மாசு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் உலக நாடுகளின் முயற்சி பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×