search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி
    X
    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

    மியான்மரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்வு

    மியான்மர் நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிகை 59 ஆக உயர்ந்துள்ளது.
    யாங்கூன்:

    மியான்மர் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.

    இதற்கிடையில், அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மோன் மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள தாப்யோ கோன் கிராமத்தில் பெய்த கனமழையால் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) அன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. 

    மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்

    இந்த நிலச்சரிவில் அந்த கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலச்சரிவில் சிக்கிய 28 பேரை உயிருடன் மீட்டனர். ஆனாலும், இந்த நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், இன்று மேலும் 25 உடல்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். இதனால் தாப்யோ கோன் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிலர் நிலச்சரிவில் சிக்கியுள்ளதால் அவர்களை தேடும் பணி நடைபெற்றுவருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×