search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்டு டிரம்ப்-விளாடிமிர் புதின்
    X
    டொனால்டு டிரம்ப்-விளாடிமிர் புதின்

    ரஷிய அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது

    ரஷியா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. இது புதிய ஆயுத போட்டிக்கு வழி வகுக்குமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது.
    வாஷிங்டன்:

    அணு ஆயுத பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையே கடந்த 1987-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

    நடுத்தர தொலைவு அணு ஆயுதங்கள் உடன்படிக்கை (ஐ.என்.எப்.) என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், நிலத்தில் இருந்து ஏவப்படும் சிறிய மற்றும் நடுத்தர தூர அணு ஆயுத ஏவுகணைகளை இரு நாடுகளும் பயன்படுத்த தடை விதிக்கிறது.

    கடலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை இது கட்டுப்படுத்தாது. அதோடு இரு நாடுகளும் எதிர்த்தரப்பின் ஆயுதங்களை சோதிக்க இந்த ஒப்பந்தம் பரஸ்பரம் அனுமதி வழங்குகிறது.

    இந்த ஒப்பந்தத்தின் கீழ் இருநாடுகளில் இருந்த சுமார் 2,700 ஏவுகணைகள் 1991-ம் ஆண்டு அழிக்கப்பட்டன.

    இந்த சூழலில் கடந்த 2002-ம் ஆண்டு கண்டம்விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது.

    இது ரஷியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஐ.என்.எப். ஒப்பந்தம் ரஷியாவின் நலன்களை பாதுகாக்கவில்லை என ரஷிய அதிபர் புதின் 2007-ம் ஆண்டு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    அதனை தொடர்ந்து ரஷியா ஐ.என்.எப். ஒப்பந்தத்தை மீறுவதாகவும், ஒப்பந்தத்தில் தடை செய்யப்பட்ட 500 முதல் 5,500 கி.மீ. தூரம் பாயும் புதிய ஏவுகணையை உருவாக்கியுள்ளதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

    இந்த விவகாரத்தில் இரு நாடுகள் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வந்த நிலையில், ரஷியா உடனான ஐ.என்.எப். ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக கடந்த பிப்ரவரி மாதம் டிரம்ப் அறிவித்தார்.

    நாங்கள் மட்டும் இந்த ஒப்பந்தத்தை ஒருதலைபட்சமாக கடைப்பிடிக்க முடியாது என கூறிய அவர், 6 மாதத்தில் அதில் இருந்து முழுமையாக வெளியேறப்போவதாக கூறினார்.

    இந்த நிலையில் ஐ.என்.எப். ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா நேற்று முழுமையாக வெளியேறியது. இதுகுறித்து பேசிய அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ “ஒப்பந்தம் செயலிழந்து போனதற்கு ரஷியா மட்டுமே பொறுப்பு” என கூறினார்.

    மேலும் “ரஷியா ஒப்பந்தத்தின் விதிகளை மீறியதை, எங்கள் நேட்டோ நட்பு நாடுகளோடு கலந்து ஆலோசித்து தீர்மானித்த பிறகே நாங்கள் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி இருக்கிறோம்” எனவும் அவர் கூறினார்.

    ஐ.என்.எப். ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை தொடர்ந்து, அந்த ஒப்பந்தம் முற்றிலும் செயல் இழந்துவிட்டதாக ரஷியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை புதிய ஆயுத போட்டிக்கு வழிவகுக்குமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது.
    Next Story
    ×