search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரித்தி பட்டேல் - ரிஷி சுனாக் - அலோக் சர்மா
    X
    பிரித்தி பட்டேல் - ரிஷி சுனாக் - அலோக் சர்மா

    இங்கிலாந்தில் 3 இந்திய வம்சாவளியினருக்கு போரிஸ் ஜான்சன் மந்திரிசபையில் இடம்

    இங்கிலாந்து நாட்டில் 3 இந்திய வம்சாவளியினருக்கு போரிஸ் ஜான்சன் மந்திரிசபையில் இடம் கிடைத்துள்ளது. உள்துறை மந்திரியாக இந்திய வம்சாவளிப்பெண் 47 வயது பிரித்தி பட்டேல் பொறுப்பேற்றார்.
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.

    அவர் தனது மந்திரிசபையில் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை மந்திரி பதவியை இந்திய வம்சாவளிப்பெண்ணான பிரித்தி பட்டேலுக்கு (வயது 47) வழங்கினார். இதன்மூலம் இங்கிலாந்து நாட்டின் முதல் இந்திய வம்சாவளி உள்துறை மந்திரி என்ற பெயரை இவர் பெறுகிறார்.

    இவர் லண்டனில் 1972-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி குஜராத்தை பூர்விகமாக கொண்ட சுஷில், அஞ்சனா பட்டேல் தம்பதியரின் மகளாக பிறந்தவர்.

    முந்தைய தெரசா மே மந்திரிசபையில், சர்வதேச வளர்ச்சித்துறை மந்திரி பதவி வகித்தவர். வெளியுறவுத்துறையிடம் சொல்லாமல் இஸ்ரேல் அரசியல்வாதிகளுடன் பேச்சு நடத்தியதாக எழுந்த சர்ச்சையால், 2017-ம் ஆண்டு பதவியை துறந்தார்.

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் விவகாரத்தில் தெரசா மே மேற்கொண்ட ஒப்பந்தம் மோசமானது என கூறி, அதற்கு எதிராக தொடர்ந்து வாக்களித்து வந்தார்.

    போரிஸ் ஜான்சன்

    புதிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் தீவிர ஆதரவாளர். இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் நடத்தும் விழாக்களில் எல்லாம் தவறாமல் கலந்து கொள்பவர் என்ற பெயர் பிரித்தி பட்டேலுக்கு உண்டு. பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரும் ஆவார்.

    பிரித்தி பட்டேலின் கணவர் அலெக்ஸ் சாயர், பங்குச்சந்தை சந்தைப்படுத்தல் ஆலோசகர். இந்த தம்பதியருக்கு பிரெட்டி என்று 11 வயது மகன் உள்ளார்.

    மேலும் 2 இந்திய வம்சாவளியினருக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது மந்திரிசபையில் வாய்ப்பு அளித்திருக்கிறார். அவர்கள், அலோக் சர்மா, ரிஷி சுனாக் ஆவார்கள்.

    அலோக் சர்மா, சர்வதேச வளர்ச்சித்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ரிஷி சுனாக்குக்கு, கருவூலத்துறை மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அலோக் சர்மா (51), முந்தைய தெரசா மே மந்திரிசபையில் முதலில் வீட்டு வசதித்துறை பின்னர் வேலை வாய்ப்புத்துறை ராஜாங்க மந்திரியாக இருந்து வந்துள்ளார். ஆக்ராவில் பிறந்த இவர் 5 வயதாக இருந்தபோது பெற்றோருடன் இங்கிலாந்தில் குடியேறினார்.

    அலோக் சர்மாவின் மனைவி சுவீடனை சேர்ந்தவர். இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இங்கிலாந்தில் பிறந்த ரிஷி சுனாக் (39), இன்போசிஸ் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார். நாராயண மூர்த்தி, சுதா தம்பதியரின் மகள் அக்‌ஷதாவை இவர் மணந்து கொண்டுள்ளார். இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    முந்தைய தெரசா மே மந்திரிசபையில் ராஜாங்க மந்திரி பதவி வகித்துள்ளார்.
    Next Story
    ×