search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானில் தலீபான்கள்-ராணுவம் மோதல்
    X
    ஆப்கானிஸ்தானில் தலீபான்கள்-ராணுவம் மோதல்

    ஆப்கானிஸ்தானில் தலீபான்கள்-ராணுவம் மோதல் - அப்பாவி மக்கள் 76 பேர் பலி

    ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் மற்றும் ராணுவத்தினர் இடையிலான மோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலியாகினர்.
    காபூல்:

    அமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக மையம், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல்களை நடத்தியதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

    பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு தான் இந்த கொடூர தாக்குதலை அரங்கேற்றியது. அதனை தொடர்ந்து, அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.

    இதில் அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்கள் விரட்டியடிக்கப்பட்டு, ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. ஆனாலும் தலீபான் பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இன்றும் அங்கு தலீபான்களின் கை ஓங்கி நிற்கிறது.

    தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்க ஆப்கானிஸ்தான் அரசு படைகளும், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளும் போராடி வருகின்றன. அதே சமயம் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு இணைந்து தலீபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகின்றன.

    பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் அதே வேளையில் தலீபான்களின் பயங்கரவாத தாக்குதல்களும், ராணுவத்தின் பதிலடி தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன. அரசு படைகளுக்கும், தலீபான்களுக்கும் இடையிலான இந்த மோதலில் அப்பாவி மக்களே அதிகம் கொல்லப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் உருஸ்கான் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து நள்ளிரவில் அரசுபடைகள் வான்தாக்குதல் நடத்தியபோது, பொதுமக்களின் குடியிருப்பு பகுதியில் குண்டுகள் விழுந்தன.

    இதில் பெண்கள் உள்பட அப்பாவி மக்கள் 35 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    அதே போல் காந்தகார் மாகாணத்தில் உள்ள காக்ரெஸ் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 4 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதற்கிடையே அதே மாகாணத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் ஒன்று சாலையோரம் பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டில் சிக்கி, வெடித்து சிதறியதில் 30 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    இப்படி அரசு படைகளின் வான்தாக்குதலிலும், பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் சிக்கியும் 24 மணி நேரத்தில் மட்டும் அப்பாவி மக்கள் 76 பேர் பலியாகி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வெவ்வேறு சம்பவங்களில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள அதிபர் அஷ்ரப் கனி, உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×