search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
    X
    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

    பெண் எம்.பி.க்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இனவெறி கருத்து

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.க்களுக்கு எதிராக இனவெறி கருத்துகளை கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.க்களுக்கு எதிராக இனவெறி கருத்துகளை கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவருக்கு கண்டனம் வலுத்து வருகிறது.

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நாட்டின் குடியேற்ற கொள்கையில் கடுமையான போக்கை கையாண்டு வருகிறார். அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே என்ற கொள்கையில் விடாப்பிடியாக இருக்கும் அவர் பிறநாடுகளில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்கள் மீது எதிர்மறையான எண்ணங்களை கொண்டு உள்ளார்.

    இதனால் அவர் அவ்வப்போது இனரீதியிலான கருத்துகளை கூறி சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். முன்னாள் ஜனாதிபதி ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை என டிரம்ப் பலமுறை தவறான கருத்தை முன்வைத்துள்ளார்.

    இந்த நிலையில் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண்கள் எந்த நாட்டில் இருந்து வந்தார்களோ அங்கேயே திரும்பி செல்லவேண்டும் என டிரம்ப் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. டிரம்பின் இந்த கருத்து மீண்டும் அவர் மீது இனவெறி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்துள்ளது. ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.க்கள் குறித்து டிரம்ப் டுவிட்டரில் கூறியதாவது:-

    முற்போக்கு சிந்தனையுள்ள ஜனநாயக கட்சி பெண் எம்.பி.க்கள், எந்த நாடுகளிலிருந்து வந்தார்களோ அந்த நாடுகள் எவ்வளவு மோசமாக, ஊழல் நிறைந்ததாக உள்ளது என்பதை பார்க்க வேண்டும். ஆனால் அவர்கள் நாங்கள் நடத்தும் அமெரிக்க மக்களின் அரசை, உலகின் சக்தி வாய்ந்த அரசை விமர்சிக்கிறார்கள்

    அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே செல்லட்டும். அங்கு தான் உதவி தேவைப்படுகிறது. அவர்களுக்கு இருக்கும் திறமையை வைத்து, குற்றங்களாலும், ஊழலாலும் சிதைந்து போன அவர்களின் நாட்டை முன்னேற்றம் அடைய செய்யலாமே?

    இவ்வாறு அவர் டுவிட்டரில் கூறினார்.

    டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் நேரடியாக பெண் எம்.பி.க்களின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், ரஷிதா டலீப், ஒகாசியோ கோர்டெஸ், ஐயானா பிரெஸ்லி மற்றும் இல்ஹான் உமர் ஆகியோரையே அவர் மறைமுகமாக குறிப்பிடுவதாக தெரிகிறது. ஏனெனில் இவர்கள் 4 பேரும் அண்மைகாலமாக டிரம்பின் குடியேற்ற கொள்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையிலேயே டிரம்ப் இந்த டுவிட்டர் பதிவை வெளியிட்டதாக கருதப்படுகிறது.

    ரஷிதா டலீப் அமெரிக்காவில் பிறந்தாலும் அவரது பூர்வீகம் பாலஸ்தீனம் ஆகும். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான முதல் பாலஸ்தீன வம்சாவளி என்ற பெருமை இவருக்கு உண்டு.

    இல்ஹான் உமர் சோமாலியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர். இவர் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பின முஸ்லிம் பெண் ஆவார். அதே போல் ஒகாசியோ கோர்டெஸ், ஐயானா பிரெஸ்லி ஆகிய இருவரும் அமெரிக்காவில் பிறந்தாலும், அவர்களின் பூர்வீகம் வேறு நாடுகள் ஆகும்.

    டிரம்பின் இந்த இனவெறி கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் வலுத்துவருகின்றன. ஜனநாயக கட்சி தலைவர்களும், சக பெண் எம்.பி.க்களும் டிரம்பை கடுமையாக சாடி வருகின்றனர். 
    Next Story
    ×