search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிடிப்பட்ட கார்
    X
    பிடிப்பட்ட கார்

    ஆஸ்திரேலியாவில் பணம், காரை திருடி 900 கிலோ மீட்டர் பயணம் செய்த சிறுமி-சிறுவர்கள் பிடிபட்டனர்

    ஆஸ்திரேலியா நாட்டில் மீன் பிடிக்க செல்லும் ஆர்வத்தில் குடும்பத்தாருக்கு தெரியாமல் பணம் மற்றும் காரை திருடிச் சென்ற ஒரு சிறுமி மற்றும் 3 சிறுவர்களை 900 கிலோமீட்டர் தூரத்தில் போலீசார் கண்டுபிடித்தனர்.
    சிட்னி:

    ஆஸ்திரேலியா நாட்டில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாகனங்களை ஓட்டும் உரிமம் வழங்கப்படுவதில்லை.

    இந்நிலையில், குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் கிரேஸ்மேர் பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமி மற்றும் 3 சிறுவர்கள் தங்களது குடும்பத்தாருக்கு தெரியாமல் வெகுதூரம் சென்று மீன்பிடிக்க திட்டமிட்டனர். அவர்களில் ஒருவர் தனது வீட்டில் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு புறப்பட்டார்.

    இன்னொருவர் தனது வீட்டில் இருந்த கார் சாவியை திருடிக்கொண்டு வந்தார். பின்னர் இவர்கள் நால்வரும் மீன்பிடி தூண்டில்களுடன் குவீன்ஸ்லாந்தில் இருந்து காரில் புறப்பட்டனர். 

    அவர்களில் ஒருவர் காரை ஓட்ட, போகும் வழியில் சுமார் 140 கிலோமீட்டர் தூரத்தை கடந்தபோது, பெட்ரோல் தீர்ந்து விடுவதுபோல் தோன்றியதால் பனானா என்ற நகரில் ஆளில்லாத ஒரு பெட்ரோல் பங்கில் தாங்களாகவே பெட்ரோலை நிரப்பிக் கொண்டு அதற்கான பணம் ஏதும் தராமல் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.

     இவர்கள் 4 பேரும் காரை மாற்றி, மாற்றி ஓட்டியவாறு சுமார் 900 கிலோமீட்டர் தூரத்தை கடந்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை வந்தடைந்தனர்.அங்கிருந்த போக்குவரத்து காவலர்கள் சிறுவர்கள் மட்டும் தனியாக காரில் வருவதை கவனித்து அவர்களை விரட்டுவதுபோல் செல்லாமல் மெதுவாக பின்தொடர ஆரம்பித்தனர். 
    பின்தொடரும் போலீஸ்
    தங்களை போலீசார் பின்தொடர்வதை கவனித்து விட்ட அவர்கள் கிராப்டன் நகரின் அருகே காரை ஓரமாக நிறுத்தி பயத்தில் உள்பக்கம் தாளிட்டுக் கொண்டு வெளியேவர மறுத்தனர்.

    பின்னர், காரின் ஜன்னல் கண்ணாடியை தடியால் அடித்து உடைத்து கதவை திறந்த போலீசார், குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் வசிக்கும் அந்த சிறுமி மற்றும் சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் அளித்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    போலீசாரிடம் பிடிபட்ட சிறுமி, சிறுவர்கள் அனைவரும் 10 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×