search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எத்தி ஏர்லைன்ஸ் விமானம்
    X
    எத்தி ஏர்லைன்ஸ் விமானம்

    ரன்வேயை விட்டு விலகி புல்வெளியில் தரையிறங்கிய விமானம்- காத்மாண்டு விமான நிலையம் மூடல்

    காத்மாண்டு விமான நிலையத்திற்கு வந்த விமானம் ரன்வேயில் இருந்து விலகி புல்வெளியில் இறங்கியதால், விமான நிலையம் மூடப்பட்டது.
    காத்மாண்டு:

    நேபாளத்தின் தெற்கு பகுதியில் இருந்து எத்தி ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று காத்மாண்டு விமான நிலையத்திற்கு வந்தது. அதில் 66 பயணிகள் பயணித்தனர். விமானம் தரையிறங்கும்போது, ரன்வேயில் நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கிச் சென்றது. இதனால் உள்ளே இருந்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.

    ரன்வேயை விட்டு விலகிச் சென்ற விமானம் சுமார் 15 மீட்டர் தூரம் சென்று புல்வெளியில் நின்றது. இதையடுத்து மீட்புக்குழுவினர் விரைந்து சென்று பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர். 2 பேருக்கு மட்டும்  காயம் ஏற்பட்டிருந்தது. அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சமீபத்தில் பழுதுபார்க்கப்பட்ட ரன்வே மீண்டும் சேதமடைந்துள்ளது. இதனால் விமான நிலையம் மூடப்பட்டது. புல்வெளியில் டயர் புதைந்த நிலையில் சிக்கிய விமானத்தை அகற்றும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பலத்த மழை காரணமாக ரன்வேயை ஒட்டியுள்ள பகுதியில் சேறும் சகதியுமாக காணப்படுவதால், விமானத்தை வெளியே எடுக்க நீண்ட நேரம் ஆகும் என விமான நிலைய பொது மேலாளர் கூறியுள்ளார்.

    நேபாள நாட்டின் விமானங்களின் பாதுகாப்பு மோசமான நிலையில் இருப்பதால், அந்த விமானங்கள் ஐரோப்பிய ஒன்றிய வான் பகுதியில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நேபாளத்தின் ஒரே சர்வதேச விமான நிலையமான இங்கு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதேபோன்று ஒரு விபத்து ஏற்பட்டது. உள்நாட்டு விமானம் ஒன்று டேக் ஆப் ஆகும்போது ரன்வேயை விட்டு விலகி சறுக்கியது. அந்த விமானத்தை அப்புறப்படுத்த 11 மணி நேரம் ஆனது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×