search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாஸ்திரி மரியம் திரேசியா
    X
    கன்னியாஸ்திரி மரியம் திரேசியா

    கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு புனிதர் பட்டம்

    கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு புனிதர் பட்டத்தை போப் ஆண்டவர் பிரான்சிஸ், வாடிகனில் நடக்கிற விழாவில் வழங்குகிறார்.
    வாடிகன்:

    கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கன்னியாஸ்திரி மரியம் திரேசியா சிரமெல். இவர் அங்கு திரிச்சூர் மாவட்டம், புத்தன்சிரா என்ற இடத்தில் 1876-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 26-ந்தேதி பிறந்தார்.

    தனது 50-வது வயதில் குழிக்கட்டுசேரி என்ற இடத்தில் 1926-ம் ஆண்டு, ஜூன் மாதம் 8-ந் தேதி மரணம் அடைந்தார்.

    இவர் ஹோலி பேமிலி என்ற திருச்சபையை நிறுவியவர். 12 ஆண்டுகளுக்குள் 3 புதிய கான்வென்டுகள், 2 விடுதிகள், ஒரு ஆய்வு இல்லம், ஒரு அனாதை இல்லம் ஆகியவற்றை ஏற்படுத்தி சாதனை படைத்தார்.

    இவர் உருவாக்கிய ஹோலி பேமிலி திருச்சபையில் இப்போது 1,500-க்கும் மேற்பட்ட சகோதரிகள் கேரளா, வட இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, கானா ஆகிய பகுதிகளில் பணியாற்றுகின்றனர்.

    இந்த நிலையில் மரியம் திரேசியாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் ஒருவர் புனிதராக அங்கீகரிக்கப்படுவதற்கு 2 அற்புதங்கள் செய்திருக்க வேண்டும்.

    அந்த வகையில், கேரளாவில் 1956-ம் ஆண்டு பிறந்த மேத்யூ பெல்லிச்சேரி என்பவருக்கு கால்கள் வளைந்து நடக்க முடியாமல் இருந்தது. இதில் மரியம் திரேசியாவின் உதவியை நாடி இவரது குடும்பத்தினர் 33 நாட்கள் உபவாசம் (உண்ணாநோன்பு) இருந்து பிரார்த்தனை செய்தனர். இதன் காரணமாக அவரது கால்கள் நேராகி இயல்பாக நடந்தார். இது அற்புதமாக கருதப்பட்டது.

    இதன் காரணமாக மரியம் திரேசியாவுக்கு 2000-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி புனிதப்பட்டத்துக்கு முந்தைய தகுதி நிலை வழங்கப்பட்டது.

    உடல்நலமற்ற கிறிஸ்டோபர் என்ற குழந்தையின் நோய்க்கு மரியம் திரேசா நிவாரணம் தேடித்தந்தார். இதை அற்புதமாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஏற்று அங்கீகரித்தார்.

    இதையடுத்து வாடிகனில் அக்டோபர் மாதம் 13-ந்தேதி நடக்கிற விழாவில் மரியம் திரேசியாவுக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்குகிறார்.

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாடிகனில் நேற்று வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே கேரளாவை சேர்ந்த அருட்தந்தை குரியக்கோஸ் எலியாஸ் சவாரா, சகோதரி யூப்ரசியா, சகோதரி அல்போன்சா ஆகியோர் புனிதர் பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×