search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிரவ் மோடி
    X
    நிரவ் மோடி

    நிரவ் மோடி சகோதரியின் சிங்கப்பூர் வங்கி கணக்கில் ரூ.44 கோடி முடக்கப்பட்டது

    நிரவ் மோடி சகோதரி புர்வி மோடியின் பெயரில் சிங்கப்பூர் வங்கியில் பதுக்கப்பட்ட 44 கோடியே 41 லட்சம் ரூபாயை முடக்கி சிங்கப்பூர் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    சிங்கப்பூர்:

    மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி(48) தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று, திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர்.     

    லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடியை கடந்த மார்ச் மாதம் லண்டன் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவரது ஜாமீன் மனுக்கள் மூன்று முறை நிராகரிக்கப்பட்டது. அவரது சிறைக்காவலும் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது.

    இதற்கிடையே நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக லண்டன் கோர்ட்டில் வழக்கு நடைபெறுகிறது. நிரவ் மோடியை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

     புர்வி மோடியுடன் நிரவ் மோடி


    பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன்பெற்ற தொகையில் பலகோடி ரூபாயை வெளிநாடுகளில் உள்ள பல வங்கிகளில் தனது உறவினர்கள் பெயரால் ரகசிய கணக்குகளை தொடங்கி நிரவ் மோடி பதுக்கி வைத்திருப்பதாக இந்தியாவில் உள்ள பொருளாதார அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.

    இதைதொடர்ந்து, அந்த தொகை எல்லாம் மீட்கும் நடவடிக்கையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முதல்கட்டமாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள 4 வங்கி கணக்குகளில் நிரவ் மோடி பதுக்கி வைத்திருந்த சுமார் 283 கோடி ரூபாய் சமீபத்தில் முடக்கப்பட்டது.

    இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள பிரபல வங்கி ஒன்றில் நிரவ் மோடி தனது சகோதரி புர்வி மோடி மற்றும் மைத்துனர் மையன்க் மேத்தாவுக்கு சொந்தமான நிறுவனத்தின் பெயரால் சேமித்து வைத்துள்ள பணம் இந்தியாவில் வங்கி கடன் மூலம் நிரவ் மோடி மோசடி செய்த தொகையின் ஒரு பகுதியாகும்.

    எனவே, அந்த தொகையை முடக்குமாறு உத்தரவிட வேண்டும் என சிங்கப்பூர் ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    இதைதொடர்ந்து, அங்குள்ள வங்கியில் நிரவ் மோடி தனது சகோதரி புர்வி மோடி மற்றும் மைத்துனர் மையன்க் மேத்தாவுக்கு சொந்தமான நிறுவனத்தின் பெயரில் வைக்கப்பட்டிருந்த 44 கோடியே 41 லட்சம் ரூபாயை முடக்கி சிங்கப்பூர் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதாக அமலாக்கத்த்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
    Next Story
    ×