search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெரசா மே, புதின்
    X
    தெரசா மே, புதின்

    பிரிட்டன், நேசநாடுகளை நிலைகுலைக்கும் செயல்களை நிறுத்துங்கள் - புதினிடம் தெரசா மே கண்டிப்பு

    பிரிட்டன் மற்றும் அதன் நேசநாடுகளை நிலைகுலைய வைக்கும் செயல்பாடுகளை ரஷியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என புதினிடம் தெரசா மே நேரில் வலியுறுத்தினார்.
    டோக்கியோ:

    ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பல நாடுகளின் தலைவர்கள் இன்று தனித்தனியாக சந்தித்து தங்களுக்கு இடையில் உள்ள பல்வேறு விவாகரங்கள் தொடர்பாக விவாதித்தனர்.

    அவ்வகையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த தெரசா மே, 'பிரிட்டனுடன் நல்லுறவு ஏற்பட வேண்டுமானால், பொறுப்பற்ற முறையில் பிரிட்டன் மற்றும் அதன் நேசநாடுகளை அச்சுறுத்தும் வகையில் நிலைகுலைய வைக்கும் செயல்பாடுகளை ரஷியா நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    பிறநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது, சைபர் தாக்குதல் ஆகியவற்றையும் கைவிட வேண்டும்’ என வலியுறுத்தினார்.

    ரஷியாவுடன் வேறு வகையிலான நல்லுறவை வளர்த்துக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், அவ்வாறு ஏற்பட வேண்டுமானால் ரஷிய அரசும் வேறு பாதையில் பயணிக்க முன்வர வேண்டும் எனவும் புதினிடம் தெரசா மே அறிவுறுத்தினார்.

    மகளுடன் செர்கெய் ஸ்கிரிபால்


    பிரிட்டன் நாட்டில் உள்ள சாலிஸ்பரி நகரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரஷியாவின் முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகளை விஷம் வைத்துக் கொல்ல மர்மநபர்கள் முயன்றனர். உரிய நேரத்தில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் இருவரும் உயிர் பிழைத்தனர்.

    இந்த சம்பவத்துக்கு ரஷியாவை பிரிட்டன் அரசு குற்றம்சாட்டி வருவதும், ரஷியா தொடர்ந்து மறுத்து வருவதும் நினைவிருக்கலாம். இதன் எதிரொலியாக லண்டன் - மாஸ்கோ இடையிலான தூதரக உறவுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தெரசா மே - புதின் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

    செர்கெய் ஸ்கிரிபால் கொலை முயற்சி சதி திட்டத்தில் ரஷியாவின் நேரடி பங்களிப்பு தொடர்பாக தன்னிடம் அசைக்க முடியாத ஆதாரம் இருப்பதாக புதினிடம் இன்று தெரசா மே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×