search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து பிரதமருக்கான முதற்கட்ட வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் முன்னிலை
    X

    இங்கிலாந்து பிரதமருக்கான முதற்கட்ட வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் முன்னிலை

    தெரசா மே விலகியதை தொடர்ந்து புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்கான முதற்கட்ட வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றுள்ளார்.
    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்சிட்’  ஒப்பந்தத்தை தெரசா மே-வால் பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியவில்லை. பலமுறை முயற்சி செய்தும் பலன் அளிக்காததால், தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் உள்பட பலர் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர். இவர்கள் எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டினர். இன்று முதற்கட்ட ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் போரிஸ் ஜான்சன் 114 வாக்குகள் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார். ஜெரேமி ஹன்ட் 43 வாக்குகள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    மைக்கேல் கோவ் 37 வாக்குகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். 17 வாக்குகளுக்கு கீழ் பெற்ற மார்க் ஹார்பர், அன்ட்ரிவ் லீட்சம், எஸ்தர் மெக்வே போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

    அடுத்த வாரம் நடைபெறும் 2-வது கட்ட வாக்கெடுப்பில் 7 பேர் பலப்பரீட்சை நடத்துகின்றனர். பிரெக்ஸிட்டின் முன்னாள் செயலாளர் டொமினிக் ராப் 27 வாக்குகளும், உள்துறை செயலாளர் சாஜித் ஜாவித் 23 வாக்குளுடன் 5-வது இடத்தையும், சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்காக் 20 வாக்குகளுடன் 6-வது இடத்தையும், ரோரி ஸ்டீவார்ட் 19 வாக்குகளுடன் 7-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    2-வது சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் எம்.பி.களுக்கு இடையில் இந்த மாத இறுதியில் போட்டி நடக்கும். ஜூலை மாதம் 22-ந்தேதி முடிவு அறிவிக்கப்படும். அதில் வெற்றி பெறும் நபர் இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்பார்.
    Next Story
    ×