search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜின்பிங் சந்திக்க மறுத்தால் சீன பொருட்களுக்கு கூடுதல் வரி - டிரம்ப் பகிரங்க மிரட்டல்
    X

    ஜின்பிங் சந்திக்க மறுத்தால் சீன பொருட்களுக்கு கூடுதல் வரி - டிரம்ப் பகிரங்க மிரட்டல்

    ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் இடையே டிரம்ப் தன்னை சந்தித்து பேச தவறினால் சீன பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
    பீஜிங்:

    சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உயர்த்தினார். அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது.

    அதனை தொடர்ந்து, இரு நாடுகளும் மாறி,மாறி இறக்குமதி பொருட்களுக்கான வரியை கணிசமாக உயர்த்தியதால் உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப்போர் உருவானது.

    இதற்கிடையில் கடந்த ஆண்டு இறுதியில் அர்ஜென்டினாவில் நடந்த ஜி-20 மாநாட்டின் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து வர்த்தகப்போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.



    அதன் பின்னர் இரு நாடுகள் இடையிலான வர்த்தகப்போர் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு, நிரந்தர தீர்வுகாண இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இதனால் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 200 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.13 லட்சத்து 84 ஆயிரத்து 950 கோடி) மதிப்புடைய பொருட்களுக்கான வரியை 25 சதவீதமாக அமெரிக்கா கடந்த மாதம் உயர்த்தியது. அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை கணிசமாக அதிகரித்தது.

    இதன் காரணமாக இரு நாடுகள் இடையிலான வர்த்தகப்போர் உச்சத்தை எட்டி இருக்கிறது. இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசி, ஒருமித்த கருத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினால் மட்டுமே வர்த்தகப்போர் முடிவுக்கு வரும் என்கிற சூழல் உருவாகி உள்ளது.

    இந்த நிலையில் ஜப்பானின் ஒசாக்கா நகரில் வருகிற 28, 29-ந் தேதிகளில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் கலந்துகொள்கிறார்கள். இந்த மாநாட்டுக்கு இடையில் இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், ஜி-20 மாநாட்டின் போது ஜின்பிங் தன்னை சந்திக்காவிட்டால், 300 பில்லியன் டாலர் (ரூ.20 லட்சம் கோடி) மதிப்புடைய சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதமாக உயர்த்துவேன் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

    பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘ஜின்பிங் என்னை சந்திக்க தயாராக இருப்பார் என நினைக்கிறேன். அவர் அதற்கு தயாராக இல்லை என்றால் நான் ஆச்சரியப்படுவேன். நாங்கள் இருவரும் சந்தித்து பேசுவது சரியாக நடக்க வேண்டும் என விரும்புகிறேன்’’ என்றார்.

    மேலும் அவர், ‘‘அதே சமயம் ஜி-20 மாநாட்டின் இடையே ஜின்பிங் என்னை சந்திக்க தவறிவிட்டால், 300 பில்லியன் டாலர் மதிப்புடைய சீன பொருட்களுக்கான இறக்குமதி வரி நிச்சயமாக உயர்த்தப்படும்’’ என கூறினார்.
    Next Story
    ×