search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் இந்து கோவிலை அடித்து நொறுக்கி சூறையாடிய மர்ம நபர்கள்
    X

    அமெரிக்காவில் இந்து கோவிலை அடித்து நொறுக்கி சூறையாடிய மர்ம நபர்கள்

    அமெரிக்காவில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், சிலைகளை அவமதித்து, பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. #USHindutemplevendalised
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கென்டக்கி மாநிலம், லூயிஸ்வில்லே நகரில் பிரசித்தி பெற்ற சுவாமி நாராயணன் கோவில் உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் இந்த கோவிலுக்குள் நுழைந்து, கோவிலின் சிலைகள் மற்றும் கலைநயம் வாய்ந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.

    கோவிலின் உட்புற சிலைகள் மற்றும் சுவர்களின் மீது கருப்பு நிற சாயம் அடித்து, சில வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன. மேலும் அங்கிருந்த நாற்காலி ஒன்றின் மீது கத்தி குத்தப்பட்டிருந்தது. பின்னர் ஜன்னல், கதவுகள் உடைக்கப்பட்டு, அலமாரி காலியாக இருந்தது. இச்சம்பவம் இந்திய-அமெரிக்க மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது மத வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக இருந்ததாக பலரும்  குற்றம்சாட்டி உள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மேயர் கிரெக் பிஷ்ஷர், கண்டனம் தெரிவித்துள்ளார். சேதமடைந்த கோவிலை பார்வையிட்ட அவர், இது குறித்து மேலும் பேசுகையில், “இதுபோன்ற கோழைத்தனம் நம் சமூகத்திற்கு தீங்கானது. நம் நாடு இரக்கம் மற்றும் ஒற்றுமையை மட்டுமே வலியுறுத்துகிறது. நாம் ஒரு நகரம், ஒரு நாடு எனும் வகையில், சமத்துவத்துடன் அனைவருக்கும் மரியாதை செலுத்தும் விதமாக வாழ வேண்டும்" என கூறினார்.

    எந்த மதத்தை சார்ந்திருந்தாலும் இவ்வாறு செய்திருக்கக்கூடாது எனவும், நாம் அமைதியான முறையில் வழிபாட்டிற்காக வந்துள்ளதால் மகிழ்ச்சியாக கடவுளை வழிபட வேண்டும் எனவும் அப்பகுதியைச் சேர்ந்த ராம் படேல் கூறினார். இச்சம்பவம் மிகவும் வருந்தக்கூடியது எனவும், அக்கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் லூயிஸ்வில்லே காவல் துறை அதிகாரி ஸ்டீவ் கான்ராட் தெரிவித்துள்ளார்.

    கென்டக்கியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்க பிரதிநிதி நிமா குல்கர்னி கூறுகையில், "இந்த சம்பவம் எங்கள் நம்பிக்கை மற்றும் சமூகத்தை பலவீனப்படுத்துவதற்கான அச்சுறுத்தல்" என்றார். கடந்த காலங்களில் இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #USHindutemplevendalised

    Next Story
    ×