search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ விமானம் கருங்கடலில் விழுந்த விபத்தில் பலியான 92 பேருக்கு ரஷியாவில் தேசிய அஞ்சலி
    X

    ராணுவ விமானம் கருங்கடலில் விழுந்த விபத்தில் பலியான 92 பேருக்கு ரஷியாவில் தேசிய அஞ்சலி

    சிரியாவுக்கு புறப்பட்டு சென்ற வழியில் கடலில் விழுந்து நொறுங்கிய ரஷிய ராணுவ விமானத்தில் சென்ற 92 பேரும் பலியானதற்கு ரஷியா முழுவதும் தேசிய கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
    மாஸ்கோ:

    சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியை அகற்ற வேண்டும் என களமிறங்கியுள்ள கிளர்ச்சிப் படையினர் கடந்த 6 ஆண்டுகளாக அரசுப் படைகளுடன் உள்நாட்டுப்போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உள்நாட்டுப் போரில் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷியப் படைகளும் களமிறங்கி, விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வருகின்றன.

    சிரியாவின் லட்டிக்கா மாகாணத்தில் ஹமெய்மிம் என்ற இடத்தில் ரஷிய படைகளுக்காக ராணுவ தளம் அமைத்து தரப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் போர் விமானங்கள் இந்த முகாமில் இருந்துதான் புறப்பட்டு செல்கின்றன.

    இந்நிலையில், வரும் புத்தாண்டு தினத்தையொட்டி சிரியாவில் முகாமிட்டுள்ள தங்கள் நாட்டு ராணுவ வீரர்களுக்காக கேளிக்கை மற்றும் இசை நிகழ்ச்சியை நடத்த ரஷியா முடிவு செய்தது.

    இதற்காக, சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற ராணுவ இசைக்குழுவினரான அலெக்சான்ட்ரவ் என்செம்ப்ளே இசைக்குழுவினரையும், அந்நாட்டின் பிரபலமான சில பத்திரிகை நிருபர்களையும் அங்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி, அவர்களை சுமந்து கொண்டு டி.யு–154 ரக ராணுவ விமானம் நேற்று முன்தினம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து சிரியாவின் லட்டாகியா நகரை நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் இசைக்குழுவினர், ஊடக நிருபர்கள் 84 பேரும் விமானிகள் சிப்பந்திகள் 8 பேரும் என மொத்தம் 92 பேர் பயணம் செய்தனர்.

    இந்த விமானம் வழியில் ரஷியாவில் உள்ள சோச்சி மாகாணத்தில் ஆட்லர் விமான நிலையத்தில் தரையிறங்கி, பெட்ரோல் நிரப்பிகொண்டு, உள்ளூர் நேரப்படி அதிகாலை சுமார் 5 மணியளவில் மீண்டும் பயணத்தை தொடர்ந்தது.

    அங்கிருந்து புறப்பட்டு சென்ற 20 நிமிடத்தில் ரேடார் கண்காணிப்பு திரையில் இருந்து அந்த விமானம் மறைந்தது. அதைத் தொடர்ந்து, மாயமான அந்த விமானத்தை தேடும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.

    நூற்றுக்கணக்கான ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் 27 கப்பல்களில் சுமார் 3 ஆயிரம் பேர் தேடும் பணியில் ஈடுபட்டனர். சிலமணி நேரத்துக்கு பின்னர் அந்த விமானம், கருங்கடல் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.

    அந்த விமானத்தின் சிதைவுகள் சோச்சி நகர கடலோர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. சோச்சி நகர கடலோரத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

    இந்த விபத்தில் பயணிகள், சிப்பந்திகள் என 92 பேரும் பலியாகி இருக்க வேண்டும், யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று மாஸ்கோவில் இருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன. பலியானவர்களின் உடல்களை தேடி கைப்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த விமான விபத்துக்கு பயங்கரவாத தாக்குதலோ, மோசமான வானிலையோ காரணமாக இருக்காது என்றும், விமானத்தின் தொழில் நுட்பக்கோளாறு அல்லது விமானியின் தவறுதான் காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

    இருப்பினும், முறையான விசாரணையை ரஷிய விசாரணைக்குழு தொடங்கி உள்ளது. விபத்து பற்றிய விவரங்கள் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தெரிவிக்கப்பட்டவுடன் நேற்றைய (26-ம் தேதி) நாளை தேசிய துக்க தினமாக அனுசரிக்குமாறு நாட்டு மக்களை கேட்டு கொண்டார்.

    கருங்கடல் பகுதியில் கடந்த இருநாட்களாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் பத்துக்கும் அதிகமான உடல்களை இதுவரை கண்டுபிடித்துள்ளனர்.



    இதற்கிடையே, இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொள்வதற்காக விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில், துரதிர்ஷ்டமான இந்த விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு நேற்று ரஷியா மக்கள் நாடுதழுவிய அஞ்சலி செலுத்தினர். அரசு கட்டிடங்களில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன.

    விபத்துக்குள்ளான விமானம் புறப்பட்டு சென்ற சோச்சி நகர விமான நிலையம் மற்றும் மாஸ்கோ நகரில் உள்ள ராணுவ தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள அலெக்சான்ட்ரவ் என்செம்ப்ளே இசைக்குழு பயிற்சி பள்ளி உள்ளிட்ட இடங்களில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள், இறந்த வீரர்களின் ஆன்மா சாந்தியடைய மலர் வளையங்களை வைத்து பிரார்த்தனை நடத்தினர்.
    Next Story
    ×