search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இத்தாலி பிரதமர் விரைவில் ராஜினாமா?: மந்திரி சூசக தகவல்
    X

    இத்தாலி பிரதமர் விரைவில் ராஜினாமா?: மந்திரி சூசக தகவல்

    இத்தாலி நாட்டின் பிரதமர் மட்டியோ ரென்சி விரைவில் ராஜினாமா செய்யக்கூடும் என அந்நாட்டின் போக்குவரத்து துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
    ரோம்:

    இத்தாலி நாட்டில் ஆட்சி இயந்திரத்தின் தலைவரான பிரதமரை தங்களது ஓட்டுரிமையின் மூலம் நீக்கம் செய்யும் அதிகாரம் பாராளுமன்ற மேல்சபை மற்றும் கீழவை உறுப்பினர்களுக்கு அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டம் உறுதிப்படுத்தியுள்ளது.

    5 ஆண்டுகள் ஆட்சிக்காலத்தை நிறைவு செய்யாமல், இவ்வாறு அவ்வப்போது ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டதால் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இத்தாலியில் 63 முறை ஆட்சிக் கவிழ்ப்புகளும், புதிய அரசுகள் தேர்வும் நடைபெற்றுள்ளது. இதனால், ஸ்திரமான ஒரு அரசு அமையாமல் போனதுடன், முந்தைய ஆட்சியாளர்கள் கொண்டுவந்த திட்டங்களும், கொள்கையளவிலான சில பொது சீர்திருத்தங்களும் நடைமுறைப்படுத்தப்படாமல், பாதியிலேயே முடங்கிப் போயின.

    இதன்விளைவாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மந்தநிலையை சந்தித்து வருவதுடன், வேலையில்லா திண்டாட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    இந்த நடைமுறையை முடிவுக்கு கொண்டுவந்து பிரதமரை தங்களது ஓட்டுரிமையின் மூலம் நீக்கம் செய்ய பாராளுமன்ற மேல்சபை மற்றும் கீழவை உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து நீக்குவது என தற்போதைய இத்தாலி பிரதமரான மட்டியோ ரென்சி தீர்மானித்தார்.

    இதற்காக, இத்தாலி நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டதிருத்தத்துக்கு மக்களின் ஆதரவு என்ன? என்பது தொடர்பாக நாடு முழுவதும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

    இதனையடுத்து,  அரசியலமைப்பு திருத்த சட்டம் தொடர்பாக வரும் 4-ம் தேதி பொதுவாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்தாலி பாராளுமன்றத்துக்கு வரும் 2018-ம் ஆண்டு பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த பொதுவாக்கெடுப்பின் முடிவு எவ்வாறு அமையும்? என்பது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின்படி, இந்த சட்டதிருத்தத்துக்கு ஆதரவாக 45 சதவீதம் மக்களும், எதிர்த்து 55 சதவீதம் மக்களும் வாக்களிக்ககூடும் என தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், வரும் 4-ம் தேதி நடைபெறும் பொது வாக்கெடுப்பில் பிரதமரின் நிலைப்பாட்டுக்கு எதிராக அதிக வாக்குகள் பதிவானால் உடனடியாக இத்தாலி அதிபர் செர்கியோ மாட்டரெல்லா-வை சந்தித்து மட்டியோ ரென்சி தனது ராஜினாமா கடிதத்தை சமர்பிப்பார் என்று அந்நாட்டின் போக்குவரத்து துறை மந்திரி கிரேஸியானோ டெல்ரியோ நேற்று குறிப்பிட்டுள்ளார்.

    எனினும், நாட்டின் ஆட்சி ஸ்தம்பித்து போய்விடாதபடி பாதுகாக்க வரும் 2018-பொது தேர்தல்வரை பதவியில் நீடிக்கும்படி மட்டியோ ரென்சியை அதிபர் கேட்டுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மட்டியோ ரென்சி மறுத்துவிட்டால், இத்தாலியின் புதிய பிரதமராக வேறொருவரை தேர்வு செய்ய வேண்டிய நிலைமை அதிபருக்கு ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×