search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹரிந்தர் பெயின்ஸ்
    X
    ஹரிந்தர் பெயின்ஸ்

    அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தியவனை பிடிக்க போலீசாருக்கு உதவிய சீக்கியருக்கு குவியும் பாராட்டு

    அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி மற்றும் தீவிரவாத தாக்குதல்களை நடத்தியவனை பிடிக்க போலீசாருக்கு உதவிய சீக்கியரை அந்நாட்டு மக்கள் பாராட்டு மழையால் நீராட்டி வருகின்றனர்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள மின்னெசோட்டா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் மர்மநபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தியவன் கொல்லப்பட்ட நிலையில் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

    இதேபோல், நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள எலிசபத் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு மதுபான விடுதி ஓரமாக வைக்கப்பட்ட குப்பைத் தொட்டியில் இன்று பயங்கர சப்தத்துடன் ஒரு மர்மப் பொருள் வெடித்து சிதறியது.

    அந்த குப்பைத் தொட்டியில் கிடந்த மர்மப் பொருளை, வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் ரோபோட் கத்திரித்து, பரிசோதிக்க முயன்றபோது, அது திடீரென வெடித்து சிதறியது. அதே தொட்டியில் கிடந்த மேலும் 5 குண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டன.

    இந்த சம்பவங்களை தீவிரவாத செயல்கள் என கூறியுள்ள போலீசார் இவை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையே அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எப்.பி.ஐ. அமெரிக்காவின் மன்ஹட்டன், நியூஜெர்சி குண்டுவெடிப்பு குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டது.

    மிகவும் பயங்கரமான தீவிரவாதி என்று அந்நபரை குறிப்பிட்ட எப்.பி.ஐ. அவனைப் தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டது. ஆப்கானிஸ்தானில் பிறந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற அகமத் கான் ரகாமி என்ற அந்த தீவிரவாதியின் புகைப்படத்தையும் எப்.பி.ஐ. வெளியிடப்பட்டது. அந்த புகைப்படம் அமெரிக்காவில் உள்ள அனைத்து ஊடகங்களிலும் தொடர்ந்து காட்டப்பட்டன.

    இதையடுத்து, நியூ ஜெர்சியில் உள்ள லின்டென் என்ற இடத்தில் குற்றவாளி அகமத் கான் ரகாமியை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் அகமத் கான் ரகாமியை பிடிக்க முயற்சித்தபோது அவன் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாகவும், இதில் ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார்.

    துப்பாக்கிச் சண்டையை அடுத்து பிடிபட்ட அகமத் கான் ரகாமியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், போலீசாரிடம் தீவிரவாதி அகமத் கான் ரகாமி பிடிபட்டது தொடர்பாக சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    அமெரிக்காவின் மன்ஹாட்டன் மற்றும் நியூ ஜெர்சி நகரில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாகவும், இச்சம்பவங்களில் தேடப்படும் குற்றவாளியின் புகைப்படத்தையும் அமெரிக்க - சீக்கியரான ஹரிந்தர் பெயின்ஸ் தனது லேப்டாப்பில் ஒளிபரப்பான செய்திகளின் மூலம் அறிந்து கொண்டார்.

    லின்டன் பகுதியில் மதுபார் ஒன்றை நடத்திவரும் ஹரிந்தர் பெயின்ஸ், நேற்று தனது கடைக்கு சென்றபோது, நடைபாதை ஓரமாக ஒருவன் சுருண்டுகிடப்பதை பார்த்துவிட்டு, அந்த நபர் குடிபோதையில் மயங்கி கிடப்பதாக முதலில் கருதியுள்ளார்.

    பின்னர், அவனது முகத்தை உற்றுப்பார்த்தபோது இரட்டை தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டுவரும் குற்றவாளி இவன்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட ஹரிந்தர் பெயின்ஸ், உடனடியாக போலீசாரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.



    விரைந்துவந்த போலீசார் அகமத் கான் ரகாமியுடன் துப்பாக்கிச் சண்டை நடத்தி அவனை கைது செய்துள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

    உரிய நேரத்தில் போலீசாருக்கு தகவல் அளித்து ஒரு தீவிரவாதியை கைது செய்து, அவன் அரங்கேற்ற திட்டமிட்டிருந்த மேலும் சில தாக்குதல்களை தடுத்த ஹரிந்தர் பெயின்ஸ் அமெரிக்க மக்களின் பாராட்டு மழையில் தற்போது நனைந்து வருகிறார்.

    உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து எனது தாய்நாடான அமெரிக்காவை பாதுகாப்பேன் என அமெரிக்க குடியுரிமை பெறும்போது ஏற்றுகொண்ட உறுதிமொழியை ஹரிந்தர் பெயின்ஸ் காப்பாற்றி உள்ளதாக அங்கு வாழும் இந்தியர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

    அமெரிக்க மக்களும் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூகவலைத்தளங்களின் வாயிலாக அவரை பாராட்டி வருகின்றனர்.

    ஆனால், இத்தகைய பாராட்டுகளை எல்லாம் பெரிதுபடுத்திக் கொள்ளாத ஹரிந்தர் பெயின்ஸ், பாராட்டப்பட வேண்டியவர்கள் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் அமெரிக்க போலீசார்தான் என தன்னடக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×