search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனநிலை பாதித்த குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம்
    X

    மனநிலை பாதித்த குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம்

    பாகிஸ்தானில் மனநிலை பாதித்த குற்றவாளிக்கு ஆதரவாக மனித உரிமை அமைப்பு வலியுறுத்தியதால், அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் மதகுருவை கொலை செய்த வழக்கில் இம்தாத் அலி (வயது 50) என்பவர் மரண தண்டனை பெற்று வெகாரி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரியவந்ததும் கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை உளவியல் மருத்துவர் ஒருவர் தொடர்ந்து பரிசோதனை செய்தார். பின்னர்  இம்தாத் அலி மரண தண்டனை செய்தியை அறிந்த அதிர்ச்சியில் மனநோயாளியாக மாறிவிட்டதாக கடந்த 2012ம் ஆண்டு டாக்டர் கூறியுள்ளார்.

    இந்நிலையில், நாளை அதிகாலை 5.30 மணிக்கு இம்தாத் அலியை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதனை அறிந்த மனித உரிமை அமைப்புகள், தூக்குத் தண்டனையை அரசு நிறுத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தின.

    இதனையடுத்து இம்தாத் அலியின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஒரு வார காலத்துக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையை 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. ஆனால், அடுத்த வார துவக்கத்தில் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிவிட முடியும் என மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

    பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 2014ம் ஆண்டு பள்ளிக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 150க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்ததையடுத்து மரண தண்டனைகளை மீண்டும் அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×