search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரியா மீதான பொருளாதார தடைகளை வலுப்படுத்த நடவடிக்கை: ஒபாமா உறுதி
    X

    வடகொரியா மீதான பொருளாதார தடைகளை வலுப்படுத்த நடவடிக்கை: ஒபாமா உறுதி

    ஐ.நா தடையை மீறி ஏவுகணைகளை செலுத்தி வரும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வோம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
    லாவோஸ்:

    கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

    இதன்காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.

    அந்த வகையில், இந்திய நேரப்படி நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்தது. ஹுவாங்ஜு பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் ஜப்பானில் உள்ள கிழக்கு கடலில் போய் விழுந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஐ.நா தடையை மீறி ஏவுகணைகளை செலுத்தி வரும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை வலுப்படுத்த  ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

    லாவோஸ் நாட்டில் உள்ள வியட்டியன் நகரில் தென் கொரியா அதிபர் பார்க் ஜெயின்-ஹை உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது ஒபாமா இவ்வாறு கூறினார்.

    ‘ஒட்டு மொத்த சர்வதேச சமுதயாத்தினரும் வடகொரியா மீதான பொருளாதார தடையை அமல்படுத்துவது தேவையாக இருக்கிறது என்பதை அதிபர் பார்க்கும், நானும் ஒப்புக் கொண்டுள்ளோம். இருப்பினும் வடகொரியா தனது கொள்ளையை மாற்றிக் கொண்டால், அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளது’ என்றார் ஒபாமா.
    Next Story
    ×