search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத போதகர் பெதுல்லா குலெனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்க துருக்கி அரசு வக்கீல்கள் வலியுறுத்தல்
    X

    மத போதகர் பெதுல்லா குலெனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்க துருக்கி அரசு வக்கீல்கள் வலியுறுத்தல்

    ராணுவ புரட்சிக்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் மத போதகரான பெதுல்லா குலெனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று துருக்கி வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    இஸ்தான்புல்:

    துருக்கி நாட்டில் அதிபர் எர்டோகன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் ராணுவத்தினரின் ஒரு பிரிவினர் ராணுவ புரட்சியில் ஈடுபட முயன்றனர். எனினும் அதிபருக்கு ஆதரவாக மக்கள் திரண்டு அதை முறியடித்தனர். இந்த புரட்சி முயற்சிக்கு பின்னணியாக செயல்பட்டவர் அமெரிக்காவில் வசிக்கும் துருக்கிய மத போதகரான பெதுல்லா குலென் என்று துருக்கி அரசு குற்றம்சாட்டி வருகிறது.

    இதைத்தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் என்று கருதப்படும் ராணுவத்தினர், போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள், வக்கீல்கள் ஆகியோரை அதிபர் எர்டோகன் அரசு தீவிரமாக வேட்டையாடி வருகிறது. இதுவரை 35 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு அவர்களில் 11,567 பேர் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டு விட்டனர்.

    இந்நிலையில், ராணுவ புரட்சிக்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் மத போதகரான பெதுல்லா குலெனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று துருக்கி வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இரட்டை ஆயுள் தண்டனை வழங்குவதுடன் கூடுதலாக 1,900 வருடங்கள் சிறை தண்டனை அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள உசக் நகராட்சியில் அரசு வக்கீல்கள் 2,527 பக்க குற்றச்சாட்டு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.



    முன்னதாக, இஸ்தான்புல் நகரில் உள்ள 44 முக்கிய நிறுவனங்களில் துருக்கி போலீசார் இன்று அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். ராணுவ புரட்சி தொடர்பாக நிறுவனங்களின் நிர்வாகிகள் 120 பேரை விசாரணை மேற்கொள்ள போலீசார் வாரண்ட் பெற்றிருந்தனர்.

    மத போதகர் பெதுல்லா குலெனுக்கு மறைமுகமாக நிதியுதவி அளித்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதனிடையே இஸ்தான்புல் நகரில் உள்ள 3 முக்கிய கோர்ட்டுகளில் துருக்கி போலீசார் நேற்று அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
    Next Story
    ×