search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுவிட்சர்லாந்தில் பிரதமர் மோடி கருப்பு பணம் பதுக்கல் குறித்து ஆலோசனை
    X

    சுவிட்சர்லாந்தில் பிரதமர் மோடி கருப்பு பணம் பதுக்கல் குறித்து ஆலோசனை

    5 நாடுகள் சுற்றுப் பயணத்தின் போது பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து சென்றார். கருப்பு பணம் பதுக்கல் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
    ஜெனீவா:

    பிரதமர் நரேந்திரமோடி 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். எண்ணை வளம்மிக்க கத்தார் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்த கட்ட பயணமாக சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றார்.

    நேற்று இரவு அவர் ஜெனீவா சென்றடைந்தார். இன்று சுவிட்சர்லாந்து அதிபர் ஜோகன்சினைடர் அம்மானை சந்தித்து பேசுகிறார்.

    அப்போது சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பது குறித்தும், அவற்றை மீட்பது குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துகின்றனர்.

    மேலும் அணு சப்ளை செய்யும் நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக சேர சுவிட்சர்லாந்து ஆதரவையும் பிரதமர் மோடி கோருகிறார். அணு சப்ளை செய்யும் கூட்டமைப்பில் உள்ள 48 நாடுகளில் சுவிட்சர்லாந்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அதன் பின்னர் சுவிட்சர்லாந்தின் தொழில் அதிபர்கள் மற்றும் வர்த்தகர்களை சந்திக்கிறார். அப்போது இந்தியாவில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்ய வருமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

    சுவிட்சர்லாந்து இந்தியாவுடன் வியாபார தொடர்புடைய பெரிய நாடுகளில் 5-வது இடத்தில் உள்ளது. முதலீடு செய்துள்ள நாடுகளில் 11-வது இடம் வகிக்கிறது. அதையடுத்து செர்ன் அமைப்பு செல்லும் பிரதமர் மோடி அங்கு பணிபுரியும் இந்திய விஞ்ஞானிகளையும் சந்திக்கிறார்.

    சுவிட்சர்லாந்து சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை அமெரிக்கா புறப்படுகிறார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க அரசு இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவு இயற்கையானது. 2014-ம் ஆண்டில் இருந்து அதிபர் ஒபாமாவும், பிரதமர் நரேந்திரமோடியும் 6 முறை நேரில் சந்தித்து உள்ளனர். கணக்கற்ற தடவை இருவரும் டெலிபோனில் பேசியுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அதிபர் ஒபாமாவை நேரில் சந்திக்கிறார். அப்போது பருவநிலை மாற்றம், இரு நாட்டு பாதுகாப்பு, தூதரக ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

    வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு அதிபர் ஒபாமா விருந்தளித்து உபசரிக்கிறார். நாளை மறுநாள் (8-ந்தேதி) அமெரிக்கா பாராளுமன்றத்தில் கூட்டு கூட்டத்தில் பிரதமர் ஒபாமா கலந்து கொண்டு பேசுகிறார்.

    இந்த ஆண்டு அமெரிக்க பாராளுமன்றத்தில் நடைபெறும் முதல் கூட்டு கூட்டத்தில் பங்கேற்று பேசும் முதல் வெளிநாட்டு தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×