search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    நியூயார்க்: இரண்டாம் உலகப்போர் காலத்து விமானம் ஹட்சன் ஆற்றுக்குள் பாய்ந்து மூழ்கியது
    X

    நியூயார்க்: இரண்டாம் உலகப்போர் காலத்து விமானம் ஹட்சன் ஆற்றுக்குள் பாய்ந்து மூழ்கியது

    இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க விமானம் நியூயார்க் அருகேயுள்ள ஹட்சன் ஆற்றுக்குள் பாய்ந்து மூழ்கியது.
    வாஷிங்டன்:

    இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க விமானம் நியூயார்க் அருகேயுள்ள ஹட்சன் ஆற்றுக்குள் பாய்ந்து மூழ்கியது.

    அமெரிக்க கடற்படை வீரர்கள் தினத்தையொட்டி ஒருவாரகால சாகச நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் நேற்று நியூயார்க் நகரில் நடைபெற்றன. இந்த ஒத்திகையில் ஈடுபட்ட மூன்று விமானங்களில் இரண்டு புறப்பட்ட இடமான பார்மிங்டேல் விமான நிலையத்துக்கு பத்திரமாக வந்து சேர்ந்தன.

    ஆனால், இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ‘பி-47, தண்டர் போல்ட்’ விமானம் மட்டும் திரும்பிவந்து சேரவில்லை. இந்நிலையில், நியூயார்க் அருகேயுள்ள மான்ஹட்டன் பகுதியில் ஹட்சன் ஆற்றுக்குள் பாய்ந்து மூழ்கியதாக தகவல் வெளியானது.

    இதையடுத்து, நேற்றிரவு படகுகளில் சென்ற மீட்புப் படையினர் அந்த விமானத்தை ஓட்டிச்சென்ற விமானியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணிநேர தேடலுக்கு பின்னர் அந்த விமானியின் பிரேதம் கண்டெடுக்கப்பட்டது.

    ஆற்றுக்கு மேலே பறந்தபோது அந்த விமானத்தில் இருந்து புகை வெளியேறியதாகவும், ஒருபக்கமாக சரிந்த நிலையில் பறந்துவந்த விமானம் ஆற்றுக்குள் பாய்ந்து, சில நொடிகளுக்குள் நீருக்குள் மூழ்கிப்போனதாகவும் இச்சம்பவத்தை நேரில் பார்த்த கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×