

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ராவலகோட் முதல் முசாஃபராபாத் வரையிலான பகுதிகளில் போராட்டக்காரர்களை ஒடுக்க பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ரேஞ்சர்ஸ் படைகள் தானியங்கி துப்பாக்கிகள் மூலம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராட அழைப்பு விடுத்திருந்த நிலையில், 'ஜாயின்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி' (Joint Awami Action Committee - JAAC) என்ற சமூகக் கூட்டமைப்பு அமைப்பை பாகிஸ்தான் அரசு திடீரென தடை செய்தது.
இந்த தடையை மீறியும், பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் JAAC அமைப்பைச் சேர்ந்த சாசாப் என்ற உள்ளூர் ஆர்வலர் உயிரிழந்தார்.
இவரின் உயிரிழப்பைத் தொடர்ந்து ராவலகோட் நகரில் மோதல்கள் வெடித்தன. இதனால் அசம்பாவிதங்களை தடுக்க அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு, இணைய சேவைகளும் முடக்கப்பட்டன.
இந்நிலையில் அங்கு குவிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரும், துணை ராணுவத்தினரும் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப் புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தினர்.
ஒருகட்டத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நேரடி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.