
வேலூர் முத்து மண்டபம் டோபி கானா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராணி அம்மாள். கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவருடைய மகன், மருமகளுடன் வசித்து வருகிறார்.
இவர்களது வீட்டில் 2 மாதத்திற்கு ஒரு முறை ரூ.95 முதல் ரூ.150 வரை மின் கட்டணம் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் இவரது வீட்டுக்கு நேற்று மின்கட்டண அளவு எடுக்கப்பட்டது. அப்போது மின் கட்டணம் ரூ.1,60,642 கட்ட வேண்டும் என அட்டையில் எழுதி வைத்து விட்டு மின் ஊழியர் சென்று விட்டார்.
இதனை கண்டதும் ராணி அம்மாள் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தோட்டப்பாளையம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று இது பற்றி கேட்டனர்.
அப்போது ரூ.1 லட்சத்திற்கும் மேல் மின் கட்டணம் வந்தது குறித்து மனு ஒன்று எழுதி தரும்படி அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டுக்கு ரூ.1 லட்சத்து 60,642 மின்கட்டணம் வந்தது அங்குள்ள மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ராணி அம்மாள் குடும்பத்தினர் கூறுகையில்:-
எங்கள் வீட்டில் 4 டியூப்லைட் விளக்கு, 2 மின்விசிறி, ஒரு டி.வி., பிரிட்ஜ் உள்ளது. பகல் நேரத்தில் வீட்டில் இருக்கும் 3 பேரும் வேலைக்கு சென்று விடுகிறோம். இதனால் இரவு நேரத்தில் மட்டுமே எங்கள் வீட்டில் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அரசு தந்தபோது நாங்கள் பெரும்பாலும் மின்கட்டணம் கட்டியதே இல்லை. தற்போது ரூ.95 முதல் 150 வரை கட்டணம் செலுத்தி வருகிறோம்.
இந்த மாதம் ரூ.1,60, 642 மின் கட்டணம் செலுத்த வேண்டும் என எழுதியுள்ளனர். இதுபற்றி அலுவலத்தில் கேட்டபோது மனு அளிக்குமாறு கூறி உள்ளனர். எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை என்றனர்.
இவ்வளவு மின்கட்டணம் எப்படி வந்தது என்ற அதிர்ச்சியில் இருந்து ராணி அம்மாள் குடும்பத்தினர் மீளவே இல்லை.