
சென்னை:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கோவிலம்பாக்கம் ஊராட்சியில் 20-வது மெகா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் இதுவரை 9 கோடியே 39 லட்சத்து 87 ஆயிரத்து 902 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் 18 வயதினருக்கும் மேல் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 5 கோடியே 20 லட்சத்து 29 ஆயிரத்து 899 பேர். அதாவது 89.88 சதவிகிதம் பேர், 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 3 கோடியே 90 லட்சத்து 21 ஆயிரத்து 718 பேர். அதாவது 67.41 சதவிகிதத்தினர் செலுத்தியுள்ளனர்.

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டும், முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் பணிகள் இதுவரை 77 சதவிகிதத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு சாதனைப் படைக்கப்பட்டிருக்கிறது. 18 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் 97 லட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதையே இலக்காகக் கொண்டு வாரந்தோறும் மெகா மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் முதல் தவணை தடுப்பூசியை 90 சதவிகிதத்தினரும், 2வது தவணை தடுப்பூசியை 67 சதவிகிதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்திக்கொண்டால்தான் எதிர்காலத்தில் எந்தவிதமான வைரஸ் வந்தாலும் அதை தடுக்கக்கூடியதாக இருக்கும் என்று மருத்துவ ரீதியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்போது சீனாவில் நியூகோ என்கிற வைரஸ் வவ்வாலால் ஏற்படுகிறது என்றும், இந்த வைரஸ் ஏற்பட்டால் 3 பேரில் ஒருவர் இறந்துவிடுவார் போன்ற செய்திகள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன. இச்செய்திகளை உலக சுகாதார நிறுவனம் போன்ற நிறுவனங்கள் உறுதி செய்யப்பட்டு அவர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் இச்செய்திகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஏனென்றால் பொது மக்களிடம் பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். இவற்றிற் கெல்லாம் ஒரே வழி தடுப்பூசி ஒன்றுதான்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் இதுவரை 47 லட்சத்து 09 ஆயிரத்து 066 பேர் இத்திட்டத்தில் முதல் முறையாக பயன்பெற்றிருக்கிறார்கள். தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்கள் 39 லட்சத்து 04 ஆயிரத்து 894 பேர். 86 லட்சம் பேருக்கு மருந்துப் பெட்டகங்கள் இலவசமாக வழங்கப்பட்டு பயன்பெற்றிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இணை இயக்குநர் மரு.வினய், துணை இயக்குநர் மரு.பரணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்... 3 மாநிலங்களில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி - புதிய கருத்து கணிப்பில் தகவல்