
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் மொழிப்போர் தியாகிகளின் மணி மண்டபம் உள்ளது. இங்கு 1939 மற்றும் 1965-ம் ஆண்டுகளில் மொழிப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் ஆகும்.
இதையொட்டி மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபத்தில் இன்று தமிழக அரசு சார்பில் வீர வணக்க நாள் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களையும் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் அதிகாரிகள், மொழிப்போர் தியாகிகளின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவும், அங்குள்ள புகைப்படங்களை பார்வையிடவும் அனுமதிக்கப்படவில்லை.
இதேபோல் தி.மு.க. சார்பில் மாவட்ட அலுவலகங்களில் மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களை வைத்து மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.
தி.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு காணொலி மூலம் நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று காணொலி காட்சி மூலம் வீர வணக்க உரையாற்றுகிறார்.