
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சில்லக்கூறு புத்தானம் அருகே நெல்லூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரி மற்றும் காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். போலீசாரை பார்த்ததும் கடத்தல்காரர்கள் போலீசார் மீது லாரியை ஏற்றுவது போல் வந்து தப்பி செல்ல முயன்றனர்.
போலீசார் சுதாரித்து கொண்டு லாரியை சுற்றி வளைத்தனர். அப்போது லாரியில் இருந்த கூலித் தொழிலாளர்கள் போலீசார் மீது கோடாரிகளை வீசி தாக்குதல் நடத்தி தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
லாரி மற்றும் காரில் இருந்த 55 கூலித்தொழிலாளர்கள் மற்றும் 3 கடத்தல்காரர்கள் என 58 பேரை கைது செய்தனர். அவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள்.
மேலும் போலீசார் மீது வீசப்பட்ட 24 கோடாரிகள், லாரியில் இருந்த ரூ.36 லட்சம் மதிப்புள்ள 45 செம்மரங்கள், 31 செல்போன்கள், ரூ. 75,250 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சித்தூர் மாவட்டம் கே.வி.பி.புரம் மண்டலம் ஆரே கிராமத்தை சேர்ந்த தாமு, வேலூர் சின்ன பஜாரை சேர்ந்த சுப்ரமணியம், புதுச்சேரியை சேர்ந்த பழனி ஆகிய 3 கடத்தல்காரர்களும் சிக்கினர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரியை சேர்ந்த பெருமாள், வேலுமலை ஆகியோர் கூறியதன்படி செம்மரக்கட்டைகளை கடத்த முயன்றதாகவும், இவையனைத்தையும் சென்னைக்கு கொண்டு சென்று அங்கிருந்து சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.