
சென்னை:
சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, புதிய நூல்களை வெளியிட்டார்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முயற்சியால், உலகின் மூத்த மொழியாம், சொல் வளமும், இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழி 2004-ம் ஆண்டு, அக்டோபர் 12-ம் நாள் ஒன்றிய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் கூடிய ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்ற கருணாநிதியின் கனவினை நிறைவேற்ற, தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் 2006-ம் ஆண்டு இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தின் ஒரு அங்கமாகச் செம்மொழிக்கான நிறுவனமொன்று அமைக்கப்பட்டது.
பின்னர் 2008-ம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகச் சென்னையில் அமையப்பெற்றது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 41 செவ்வியல் தமிழ் நூல்களின் ஆய்வுக்கு முதலிடம் வழங்கி வருகிறது. தொல்பழங்காலம் முதல் கி.பி. 6-ம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதிக்குள் தோன்றிய இலக்கிய, இலக்கணம் குறித்த ஆய்வினை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட இந்நிறுவனம், தமிழ் மொழி ஆய்விலும், அதன் மேம்பாட்டிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
செம்மொழித் தமிழின் தொன்மையையும், தனித்தன்மையையும், அவற்றின் மரபுத் தொடர்ச்சியையும் ஆராய்ந்து பாதுகாப்பதை முக்கிய நோக்கமாக இந்நிறுவனம் கொண்டுள்ளது.
2007-ம் ஆண்டு சென்னைக்கு அருகில் உள்ள பெரும்பாக்கத்தில் 16.86 ஏக்கர் நிலம் தமிழ்நாடு அரசின் சார்பில் செம்மொழி நிறுவனத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்நிலத்தில் ரூ.24.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனக் கட்டிடம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக்குழு தலைவரான முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பிரதமரால் 12.1.2022 அன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.
இக்கட்டிடம் தரைத்தளத்துடன் மொத்தம் நான்கு தளங்களைக் கொண்டுள்ளது. தரைத்தளத்தில் 45,000க்கும் மேற்பட்ட தொன்மையான நூல்களைக் கொண்ட நூலகமும், திருவள்ளுவர் அரங்கம் மற்றும் தொல்காப்பியர் அரங்கம் என இரண்டு கருத்தரங்க அறைகளும் உள்ளன.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அங்குள்ள நூல கத்தையும் பார்வையிட்டார்.
மேலும், திருவள்ளுவர் அரங்கம் மற்றும் தொல் காப்பியர் அரங்கம், கல்விசார் பணியாளர்கள், நிர்வாகப் பிரிவு அலுவலகங்களைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, செம்மொழி நிறுவன ஆய்வுசார் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிறுவனம் மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டிய ஆய்வுகள் குறித்தும் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில், செம்மொழி நிறுவனத்தின் தொல்காப்பிய ஆய்வு, தெய்வச்சிலையார் உரைநெறி, ஐங்குறுநூறு குறிஞ்சி, ஐங்குறுநூறு பாலை, வாய்மொழி வாய்ப்பாட்டுக் கோட்பாட்டு நோக்கில் சங்க இலக்கியம் உள்ளிட்ட 8 புதிய நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, தொழில், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார்.
மேலும், 2010 முதல் 2019 வரை கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விருதாளர்களுக்கு 22.1.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறவுள்ள விழாவில் விருதுகள் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.