
திருப்பதி:
ஆந்திர மாநிலம் முழுவதும் 3 லட்சம் லாரிகள் இயங்கி வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் கொரோனா பரவி மக்களை பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியது.
நாடு முழுவதும் தொற்று பரவியதால் ஏராளமானோர் உயிரிழந்தனர். தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஊரடங்கு காரணமாக கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பஸ், லாரி, கார் போக்குவரத்து அடியோடு முடங்கியது. போக்குவரத்து முடங்கியதால் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி வாகனங்கள் இயக்கியவர்கள் வருமானம் இன்றி தவித்தனர்.
வாங்கிய கடனுக்கு அசல் வட்டி கட்ட முடியாமல் தவித்தனர். வாங்கிய கடனை கட்டாததால் நிதி நிறுவனங்கள் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
ஆந்திரா மாநிலத்தில் மட்டும் இயங்கி வந்த 3 லட்சம் லாரிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளுக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த வில்லை என கூறி நிதி நிறுவனங்களால் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
ஒரு சிலர் 5 முதல் 10 லாரிகளை வைத்து டிரைவர்களை கொண்டு இயக்கி வந்தனர்.
கொரோனாவால் வருவாய் இழந்த லாரி உரிமையாளர்கள் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளை விற்பனை செய்துவிட்டு தற்போது வேறு ஒருவரிடம் லாரி டிரைவராக வேலை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து விஜயவாடாவை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் கூறுகையில்:-
டிரைவராக வேலை செய்து வந்த நான் ஒரு லாரியை வாங்கி சொந்தமாக ஒட்டி வந்தேன். பின்னர் படிப்படியாக 5 லாரிகளை வாங்கி டிரைவர்களை வைத்து இயக்கி வந்தேன்.
இந்த நிலையில் கொரோனாவால் வருவாயை இழந்து வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும், குடும்பத்தை நடத்த முடியாமல் தவிர்த்ததால் லாரிகளை விற்பனை செய்து விட்டு தற்போது வேறு ஒருவரிடம் டிரைவராக வேலை செய்து வருகிறேன்.
ஆந்திரா முழுவதும் இதே போல் பலர் தங்களுடைய சொந்த லாரிகளை விற்பனை செய்துவிட்டு டிரைவர்களாக வேலை செய்து வருகின்றனர்.
மீண்டும் கொரோனா பரவலால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் எங்களது நிலைமை மேலும் மோசமாகும் என்றார்.