
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வண்டலூர் உயிரியல் பூங்கா ஞாயிற்றுக்கிழமை மூடப்படுகிறது. மற்ற நாட்களில் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஞாயிற்றுக்கிழமை (9-ந் தேதி) பொது ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில்கொண்டு ஞாயிற்றுக்கிழமை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்படுகிறது. அதைத்தவிர மற்ற வார நாட்களில் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்கு திறக்கப்படும்.

முகக்கவசம் இல்லாதவர்கள் நுழைவுசீட்டு வழங்கும் இடத்தில் முகக்கவசங்களை வாங்கி கொள்ளலாம். முகக்கவசம் அணியாதவர்கள் பூங்காவினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பூங்காவிற்குள் நுழையும் பார்வையாளர்கள் கிருமி நீக்கம் செய்யும் கால் குளியல் (பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல்) வழியாகவும், வாகனங்கள் நுழையும்போது டயர்கள் கிருமிநாசினியில் நனைந்த பிறகே செல்ல வேண்டும்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, கோவிட் தொடர்பான வழிமுறைகள் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிக்கப்படுகிறது. பார்வையாளர்கள் கோவிட் நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்கள் அடங்கிய பலகை பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் நடமாட்டம் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவ்வப்போது கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.
பார்வையாளர்களால் கோவிட்-19 தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதை மேற்பார்வையிடவும் கண்காணிக்கவும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா துணை இயக்குநர் தலைமையில் ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.