
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் கடந்த 15-ந்தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழகம் முழுவதும் 69 இடங்களில் இந்த சோதனை நடந்தது. ஈரோட்டிலும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் உள்பட 8 இடங்களில் இந்த சோதனை நடந்தது.

வீரப்பன்சத்திரம் சாந்தான்காடு பகுதியில் உள்ள கோபாலகிருஷ்ணன் என்பவரது வீட்டில் இன்று காலை 6 மணி அளவில் திடீரென நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீட்டிற்குள் இருந்த யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் வெளியில் இருந்து ஆட்கள் உள்ளே வரவும் அனுமதிக்கவில்லை. வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு இந்த சோதனை நடந்து வருகிறது.
இதேபோல் வில்லரசம்பட்டியில் உள்ள செந்தில்நாதன் என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் திண்டல் சத்யா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தங்கமணியின் உறவினர் ஒருவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது.
ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 குழுவாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோட்டில் தங்கமணியின் உறவினர்கள் வீட்டில் மீண்டும் சோதனை நடந்து வருவதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது சோதனை நடந்து வரும் வீடுகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.