
சென்னை:
கொரோனாவில் இருந்து உருமாறி ஒமைக்ரான் வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டி ருக்கிறது. தென்னாப்பிரிக்கா உள்பட 12 நாடுகளில் மட்டுமே இருந்த நிலையில் இப்போது 80 நாடுகளில் பரவி இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு தொற்று மிகவும் குறைந்துள்ளது.
இந்த நிலையில் ஒமைக்ரான் வந்துள்ளது. இதுவரை 99 பேருக்கு உறுதியாகி உள்ளது. இதில் தமிழகத்திலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெருமளவு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிட்ட நிலையில் ஒமைக்ரான் பரவல் மீண்டும் மக்களிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. மீண்டும் கட்டுப்பாடுகள் வருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ஒமைக்ரான் வைரஸ் உலகத்துக்கே சவாலாக இருக்கிறது. கொரோனாவிட பலமடங்கு வேகத்தில் பரவும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.
தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கையும் அரசு எடுத்துள்ளது. நேற்று காங்கோவில் இருந்து வந்த ஆரணியை சேர்ந்த பெண் உள்பட மொத்தம் 12 பேருக்கு ஒமைக்ரானின் ஆரம்ப கட்ட அறிகுறி தெரிய வந்துள்ளது.

அவர்களது மாதிரிகள் பெங்களூரில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது முடிவு வந்தபிறகுதான் அவர்களுக்கு எந்த மாதிரியான வைரஸ் தொற்று என்பதை உறுதிப்படுத்த முடியும்.
நைஜீரியாவில் இருந்து ஒமைக்ரான் தொற்றுடன் வந்த வளசரவாக்கத்தை சேர்ந்தவரின் தந்தை இறந்து இருக்கிறார். இறுதிசடங்கில் ஒமைக்ரான் தொற்றுடன் இருந்தவருடன் கலந்து கொண்ட 59 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தி உள்ளோம்.
அதில் கலந்து கொண்ட 219 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. தற்போது வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்தவர்களில் 47 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அரசு நடவடிக்கை ஒருபுறம் இருந்தாலும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்தால் போதும். ஏற்கனவே கொரோனாவுக்கு கூறப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்தால் போதும். ஒமைக்ரானையும் வெல்ல முடியும்.
முக கவசம் அணிதல், கூட்டங்களை தவிர்த்தல், போன்ற கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதில் பொது மக்கள் கவனம் செலுத்தாதது கவலையளிக்கிறது.
ஒமைக்ரானை கட்டுப்படுத்த எந்த மாதிரி கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி எந்த முடிவும் எடுக்க வில்லை. இது தொடர்பாக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... ஒமைக்ரான் பரவல்: ஐரோப்பிய நாடுகளில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு