
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2 தவணைகளாக செலுத்தப்படுகிறது.
இதற்கிடையே 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2 தவணைகளை முழுமையாக செலுத்துவதில் தங்களது கவனம் இருக்கும் என்றும், அதன் பிறகே பூஸ்டர் தடுப்பூசி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதற்கிடையே புதிய கொரோனா வைரசான ஒமைக்ரான் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. 77 நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. இது கவலை அளிக்கக்கூடியது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.
இது அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தாதது என்றும் அறிவித்து இருந்தது. அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்தி வைரசால் முழு செயல்பாடு இழந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையின் படி இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கோவேக்சின் செலுத்தியவர்களுக்கு முதலில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தேசிய நோய் தடுப்புக்குழு முடிவு செய்துள்ளது.
நோய் தடுப்புக்குழுவின் தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு விரைவில் கூடி இதுகுறித்து விவாதிக்கிறது. இது தொடர்பாக அந்த ஆலோசனைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறும்போது, ‘தடுப்பூசி விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் கொள்கைகளை நாங்கள் பின்பற்றுகிறோம்.
அந்த அமைப்பின் பரிந்துரைகளை நாங்கள் பின்பற்றுவது தொடர்பாக விரைவில் நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்போம்‘ என்றார்.
இதையும் படியுங்கள்... ஒமைக்ரான் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாவட்ட கலெக்டர்களுக்கு ராதாகிருஷ்ணன் கடிதம்