
மதுரை:
மதுரை கொட்டாம்பட்டி 4 வழி சாலையில் ஓடும் காரை வழிமறித்து மர்ம கும்பல் 166 பவுன் தங்கநகைகள், 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றது. இது மாவட்டம் முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் சிறப்புபடை சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த், குமரகுரு ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் இருந்து தங்க நகைகளுடன் காரில் வந்த மேலாளர் மைக்கேல்ராஜ், பணியாளர் செல்வம், டிரைவர் சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் மர்ம காரில் 5-க்கும் மேற்பட்டோர் இருந்ததாக குறிப்பிட்டு உள்ளனர்.
மர்ம காரில் இருந்து இறங்கிய கும்பல் நகை பணத்தை கேட்டு மிரட்டி உள்ளது இதற்கு முதலில் மைக்கேல்ராஜ் மறுத்து உள்ளார் அப்போது அவர்கள் அரிவாளால் வெட்டி வீழ்த்தி உள்ளனர் இதனைத் தொடர்ந்து பயந்து போன சரவணன், செல்வம் ஆகிய 2 பேரும் நகை பணத்தை கொள்ளையர்களிடம் ஒப்படைத்தது தெரியவந்து உள்ளது.
விழுப்புரத்தில் இருந்து நகை கடை ஊழியர்கள் 166 பவுன் தங்க நகைகளுடன் மதுரைக்கு வரும் விஷயம் எப்படியோ கொள்ளை கும்பலுக்கு தெரிந்துள்ளது இதன் அடிப்படையில் தான் மேற்கண்ட சம்பவம் நடந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
எனவே மதுரை விழுப்புரத்தில் உள்ள நகைக் கடை நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது இதுதவிர சம்பந்தப்பட்ட ஊழியர்களின் செல்போன் பேச்சுக்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே முக்கிய குற்றவாளிகள் விழுப்புரத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதன் அடிப்படையில் மதுரை தனிப்படை போலீசார் விழுப்புரத்தில் முகாமிட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை கொட்டாம்பட்டி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி தனிப்படை போலீசார் விழுப்புரத்தில் முகாமிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.