
கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.27.22 கோடி சொத்துக்களை வாங்கி குவித்ததாக அவர் மீதும், அவரது மனைவி ரம்யா மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, கோவை, மதுரை ஆகிய 7 மாவட்டங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.23.85 லட்சம் ரொக்கப்பணம், 4.87 கிலோ தங்க நகைகள், 136 கனரக வாகனங்களின் ஆவணங்கள், 19 கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள் ஆகியவற்றை கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனை திருச்சியில் இரவு 11 மணி வரையிலும், புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசலில் உள்ள டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரியில் 16 மணி நேரமாகவும், மதர் தெரசா கல்லூரிகளில் நள்ளிரவு 1 மணி வரையிலும் நீடித்தது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் கைப்பற்றப்பட்ட நகை, ரொக்கப் பணம், சொகுசு கார்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் இன்று புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வருவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு நகைகள், சொத்து ஆவணங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன.
இதுபற்றி புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவர்மன் இன்று கூறுகையில், பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பின்னர் ஒவ்வொரு ஆவணத்தையும் ஆய்வுக்கு உட்படுத்த இருக்கிறோம். அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்புவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆவணங்களை சரிபார்த்த பின்னரே அவரை விசாரணைக்கு அழைப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும்’ என்றார்.