
சென்னை:
கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அவர் வெற்றிபெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி அந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன், அத்தொகுதி வாக்காளர் சந்தானகுமார், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி முத்துராமலிங்கம் என்பவருக்கு ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த வழக்கிற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. வழக்குகளை விசாரித்த நீதிபதி, சுப்ரீம் கோர்ட்டு நிலுவையில் உள்ள வழக்கைச் சுட்டிக்காட்டி, கனிமொழிக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளின் விசாரணையையும், 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.