
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் விசாகன், வருவாய் அதிகாரி செந்தில்குமாரி முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் 650 பேருக்கு ரூ.2.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிகள் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது இந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பாதாள சாக்கடை திட்டம் தவிர மற்ற அனைத்து திட்டங்களும் மார்ச் இறுதிக்குள் முடிவடைந்துவிடும்.
மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக மு.க.ஸ்டாலின் வழக்கம்போல பொய்யைச் சொல்லியுள்ளார். மக்கள் நல பணியை சிறப்பாக செய்வது அ.தி.மு.க. அரசு.

தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியில் எந்த நேரம் மின்சாரம் வரும் என்பதே தெரியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது மின்மிகை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது
மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மக்களின் மனங்கவர்ந்த முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்து வருகிறார். எனவே ஸ்டாலினின் ஜீபூம்பா வேலை மக்களிடம் எடுபடாது. அ.தி.மு.க. மீண்டும் அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியில் அமரும். திமுக இந்த தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை சந்திப்பது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.