
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த மூன்று மாத காலமாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் அறவழிப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் அக்கறை காட்டாமல் அலட்சியப் போக்குடன் செயல்படுகின்றது.
பெங்களூருவைச் சேர்ந்த 22 வயது இளம் சூழலியலாளர் திஷா ரவி என்ற பெண், சுவிடன் சூழலியலாளர் கிரேட்டா துன்பர்க் ‘தகவல் தொகுப்பை’ டுவிட்டரில் பகிர்ந்து, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அதற்காக, திஷா ரவி மீது 124ஏ தேசத்துரோகச் சட்டத்தை ஏவிய டெல்லி காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
மத்திய அரசின் செயற்பாடுகளை விமர்சனம் செய்தாலும், விவசாயிகள், சிறுபான்மையினர், தலித்துகள் உரிமைப் போராட்டங்களை ஆதரித்தாலும், ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில், தேசத்துரோக வழக்குப்பதிவு செய்வது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். பெங்களூரு திஷா ரவி மீது ஏவப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.