
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெல்லாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ்மென் பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக விருது வழங்கப்படுகிறது.
இவ்விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் 1 லட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது.
அவ்வகையில் இவ்வாண்டு (2020) முதல்- அமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தனியாள் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் வரவேற்கப்பட்டு, விருதுக்கான விண்ணப்பம் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 31.12.2020 என ஏற்கனவே செய்தி வெளியிடப்பட்டது.
தற்பொழுது விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம் மேலும் 26-02-2021 வரை நீட்டிக்கப்படுகிறது. போட்டிக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2017, 2018-2019-ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித்துறையின் வலைத்தளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விருதுக்கான விண்ணப்பத்தை தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை -600 008 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.