
விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. கடந்த 2006-ம் ஆண்டு முதல் முதலாக சட்டசபை தேர்தலை சந்தித்தது. தே.மு.தி.க. தனித்து போட்டியிட்ட நிலையில் விஜயகாந்த் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு 10 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தன.
2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 41 இடங்களில் தே.மு.தி.க. போட்டியிட்டது. இந்த தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது.
ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. மக்கள் நல கூட்டணியில் போட்டியிட்டது. முதல்- அமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்ட போதிலும் தே.மு.தி.க. அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
இந்தநிலையில் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் வருகிற சட்டசபை தேர்தல் தே.மு.தி.க.வுக்கு முக்கியமான தேர்தலாக மாறியுள்ளது. விஜயகாந்தின் உடல்நிலை தளர்ந்து காணப்படும் நிலையில் அவரது மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.
அ.தி.மு.க. கூட்டணியில் தான் இப்போது நீடிக்கிறோம் என்று பிரேமலதா கூறி வருகிறார். அதே நேரத்தில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காவிட்டால் தனித்து போட்டியிடவும் தே.மு.தி.க. தயாராகி வருவதாகவும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
கூட்டணி விஷயத்தில் அ.தி.மு.க.வில் பா.ம.க.வுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் தங்கள் கட்சிக்கு அளிக்கப்படுவது இல்லை என்கிற மனவருத்தம் தே.மு.தி.க. நிர்வாகிகள் மத்தியில் நிலவி வருகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவில் அ.தி.மு.க. தொடங்க வேண்டும் என்று பிரேமலதா வெளிப்படையாக பேட்டி அளித்த நிலையிலும் அ.தி.மு.க. அதனை கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் சசிகலா ஜெயிலில் இருந்து விடுதலை ஆகி இருக்கும் நிலையில் அவரை வரவேற்று பிரேமலதா சில கருத்துக்களை தெரிவித்தார். இதை அ.தி.மு.க.வினர் ஏற்கவில்லை.
அதே நேரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து பிரேமலதா கூறிய கருத்துக்களும் அ.தி.மு.க.வுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று தே.மு.தி.க. பிடிவாதம் காட்டி வருகிறது. அதை அ.தி.மு.க. கண்டு கொள்ளாமல் தே.மு.தி.க.வை கொஞ்சம் விட்டுபிடிக்கலாம் என்று கருதுவதாக கூறப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறாது என்று அ.தி.மு.க. உறுதியாக நம்புகிறது. எனவே தே.மு.தி.க.வுடன் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. இதுவரை தொடங்கவில்லை. அதே நேரத்தில் பா.ம.க., பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதுகுறித்து வெளிப்படையாக பேசிய பிரேமலதா ‘யாருக்கு எவ்வளவு தொகுதி என்பதை கூட்டணிக்கான தலைமை பேச வேண்டும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தான் பேச்சு வார்த்தை என்று சொல்லுவது தாமதத்துக்கு வழி வகுத்துவிடும். கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்க அ.தி.மு.க. காலதாமதம் செய்கிறது’ என்றார்.
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. 41 இடங்களை எதிர்பார்க்கும் நிலையில் அந்த கட்சிக்கு 10 இடங்களை மட்டுமே ஒதுக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. குறைந்த அளவு தொகுதிகளை ஏற்க தே.மு.தி.க. தயக்கம் காட்டி வருகிறது.
இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கலாமா? தனித்து போட்டியிடலாமா? என்று முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தே.மு.தி.க. உள்ளது.
இதையடுத்து அடுத்த கட்ட முடிவு எடுப்பதற்காக தே.மு.தி.க. பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.
இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்த சாரதி மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும் 234 தொகுதி பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் என மொத்தம் 320 பேர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட் டத்தில் வர இருக்கிற சட்ட சபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, தனித்து போட்டியிடலாமா? அல்லது அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்து போட்டியிடலாமா என்பது குறித்து நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். அவர்களின் கருத்துக்களையும் கேட்டு அறிந்தார்.
கூட்டத்தில் பொறுப்பாளர்கள் தெரிவிக்கும் பெரும்பான்மையான கருத்துக்கள் அடிப்படையில் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு தொடர்பாக விஜயகாந்த் முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் அடுத்த கட்டமாக கட்சியின் செயற் குழு, பொதுக்குழு கூட்டத்தை கூட்டி அதன்பிறகே இறுதி முடிவு எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் தே.மு.தி.க. நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.