
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்து விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் கொப்பலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் நேற்று அவர்கள் செங்கோட்டையில் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கலவரம் நடத்தியவர்கள் பயங்கரவாதிகள். அங்கு போராடும் விவசாயிகளுக்கு சில வெளிநாடுகளின் ஆதரவும், காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலும் உள்ளது. அதனால் தான் அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் விவசாயிகளின் பெயரில் போராட்டம் நடத்துகிறார்கள். என்ன செய்தாலும் மோடிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு மற்றும் பா.ஜனதா ஆட்சியை வீழ்த்த முடியாது. உண்மையான விவசாயிகள் யாரும் போராடவில்லை. டெல்லியில் போராடுபவர்கள் பயங்கரவாதிகள். பயங்கரவாதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது. டெல்லி விவசாயிகளின் போராட்டத்தை முன்னாள் மந்திரி எச்.கே.பட்டீல் நியாயப்படுத்துகிறார். அவர் என்றாவது விவசாயம் செய்துள்ளாரா?. விதைகள் விதைத்தது உண்டா?.
இவ்வாறு பி.சி.பட்டீல் கூறினார்.